``விபசாரத்தை சட்டபூர்வமாக்கலாம்..!'' முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே

சந்தோஷ் ஹெக்டே

இந்தியாவில் சூதாட்டத்துக்கு தடை உள்ளது. ஆனால், சட்டவிரோதமாக சூதாட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடப்பதும், அதற்காக அவ்வப்போது சிலர் கைது செய்யப்படுவதும் நடந்து கொண்டுதான்  இருக்கிறது. கிரிக்கெட் வீர்ர்கள், முன்னணி தொழில் அதிபர்கள், இதில் சிக்கி இருக்கிறார்கள். இந்நிலையில், விளையாட்டை வைத்து நடத்தும் சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கலாம் என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கி வரி விதிப்பதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று சட்ட ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது. இந்த வருவாயை பல நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது. 

இந்த நிலையில், சூதாட்டத்தைப்போல விபசாரத்தையும் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் முன்னாள் சோலிசிட்டர் ஜெனரலுமான என்.சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ``சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ள சூதாட்டம் பிரச்னையை வரவேற்கிறேன். இது நல்ல யோசனை. விளையாட்டுத்துறையில் சூதாட்டத்துக்குத் தடை போட்டிருந்தாலும் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை சட்டபூர்வமாக்கும்போது, சட்டவிரோத சூதாட்டங்கள் நின்றுவிடும். சட்டவிரோத செயல்களும் நின்றுவிடும். சூதாட்டத்தைப்போலவே, விபசாரத்தையும் சட்டபூர்வமாக்கலாமா? என்று கேட்டால் நான், 'ஆம்' என்றுதான் சொல்வேன். விபசாரம் நடக்கிறது என்பதை மறுக்க முடியுமா? எல்லா இடத்திலும் விபசாரம் நடக்கிறது. அதை சட்டபூர்வமாக்கினால், அத்தொழிலில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வருவாய் முறைப்படுத்தப்படும். விபசார தொழிலும் கட்டுப்பாட்டுக்குள் வரும்'' என்றார்.

இந்த பேச்சு தேசிய அளவில் விவாதப்பொருளாகி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!