வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:26 (07/07/2018)

``சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு" - சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க எம்பி!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்குப் பங்கு இல்லை என மகாராஷ்டிரா பா.ஜ.க எம்பி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

பாஜக எம்பி

மும்பை வடக்குத் தொகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ.க. எம்.பி கோபால் ஷெட்டி. இவர் நேற்று மகாராஷ்டிராவின் மலாடில் நடந்த முகமது நபி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்தே இந்தியா சுதந்திரப் போராட்டத்தை நடத்தினர். அவர்களே போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தனர். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் கிடையாது. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அவர்கள் அந்நியர்கள்தான். அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சிறு பங்குகூட உதவவில்லை" என்றார். கோபால் ஷெட்டியின் இந்தப் பேச்சு, வெளியான சில நிமிடங்களில் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

அதில், ``வரலாறு தெரியாமல் கோபால் ஷெட்டி பேசுகிறார். அவரது பேச்சு சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது.  சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் பங்குகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த சர்ச்சைப் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறியுள்ளது. சமீபகாலமாக பா.ஜ.க-வினர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகின்றனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், திரிபுரா முதல்வர் பிபல் குமார் தேப் உள்ளிட்டோரும் இதில் தப்பவில்லை. இதற்கு எதிர்வினைகள் எழவே சமீபத்தில் நடந்த எம்.பிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க