வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:10 (07/07/2018)

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

உயர் அதிகாரிகளின் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா? அல்லது மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு அதிகாரமா? என்பது தொடர்பாக டெல்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் இல்லை. அமைச்சரவையுடன் ஆலோசித்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பையடுத்து, டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு நடைபெற்றது.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 'இப்போதும் ஒரு சில கோரிக்கைகளை ஆளுநர் ஏற்க மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கிறார். வரலாற்றில் இல்லாத வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு வெளிப்படையாக மறுக்கிறது' என்று தெரிவித்தார். ஆனால், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அனில் பைஜால், 'கெஜ்ரிவாலுடனான சந்திப்பு நல்ல முறையில் இருந்தது. அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.