வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:08 (07/07/2018)

ஒரே தேசம் ஒரே தேர்தல்! அனைத்துக்கட்சிகளிடமும் கருத்துக் கேட்கிறது மத்திய அரசு

`ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்ற திட்டத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

தேர்தல்

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4,000 கோடியும்  சட்டமன்றங்களுக்கு மாநிலங்கள் வாரியாக 300 கோடியும் செலவாகிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மொத்தமாகவே 4,500 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான எதிர்ப்புகளும் ஆதரவுகளும் சமமாக வலுத்து வருகின்றன. இது குறித்து கருத்துக் கேட்க 7 தேசியக் கட்சிகள் மற்றும் 59 மாநிலக் கட்சிகளுக்குச் சட்ட ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. அதன்படி இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாள்களும் டெல்லியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

முன்னதாக மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் சட்டமன்றங்களின் ஆயுள் காலம் குறையும் என விளக்கமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் துணை சபாநாயர் தம்பிதுரை, தமிழகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி.க்கள் மைத்ரேயன், வேணுகோபால் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது இன்னும் உறுதியாகவில்லை. இந்த இரு கட்சிகளின் சார்பாக யார் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.