வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:21:00 (07/07/2018)

ஒன்றாம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியை - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

ன்றாம் வகுப்பு மாணவனை ஆசிரியை பிரம்பால் அடித்த விவகாரத்தை உயர் அதிகாரிகளிடம் கூறாமல் மறைத்த பள்ளித் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆசிரியை

இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில், பாலகிருஷ்ணன் - பாக்கிய லட்சுமி ஆகியோரின் 6 வயது மகன், அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தான். கடந்த மாதம், ஆசிரியர் ஷீலா அருள் ராணி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, லைன் நோட்புக்கில் இந்த மாணவன் கோணலாக எழுதியிருக்கிறான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை, மாணவனைப் பிரம்பால் அடித்திருக்கிறார். அடிபட்டதால் மாணவனின் முதுகில் ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. மறுநாள், மகனை குளிப்பாட்டும்போது முதுகில் பிரம்பால் அடித்த தடம் கிடந்ததை பாக்கியலட்சுமி பார்த்த பிறகே, விவகாரம் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில், ஆசிரியைமீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனை அடித்த சம்பவம்குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காததைத் தொடர்ந்து, அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் பாபு ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டார். மாணவனை பிரம்பால் அடித்த விவகாரத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.