வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (08/07/2018)

கடைசி தொடர்பு:07:41 (08/07/2018)

`பேசியபடி வாகனம் ஓட்டினால் மொபைல்போன் பறிமுதல்' - உத்தரகண்ட் கோர்ட் அதிரடி!

மொபைல் போனில் பேசிக்கொன்டே வாகனம் ஓட்டுவோரிடமிருந்து, மொபைல் போன்களை 24 மணி நேரத்துக்குப் பறிமுதல் செய்யும்படி உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றம் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

வாகனம்

 

மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களின் போனகளைப் பறிக்கவும், லைசென்ஸை ரத்து செய்யவும் கடந்த மாதத்தில் உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தண்டனைக்கான சட்ட திருத்தம் செய்யும் வரை விதிகளை மீறுவோரிடம் 5,000 ரூபாயை அபராதமாக வசூலிக்கலாம் என்று நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் போன வாரம் நடைபெற்ற விபத்தில் 48 பேர் உயிரிழந்திருந்தார்கள். மொபைல் போன் பேசியதால் ஏற்பட்ட கவனச் சிதறலால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து உயர் நீதிமன்றம், "சாலைப் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து போக்குவரத்து துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களின் மொபைல் போனை 24 மணி நேரத்துக்குப் பறிமுதல் செய்ய வேண்டும். போதையில் வாகனம் ஓட்டுவோர், அதிக பாரம் ஏற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க