காங்கிரஸ் கட்சி ஒரு `ஜாமின் வண்டி' ! - பிரதமர் மோடி கடும் விமர்சனம்

காங்கிரஸ் தலைவர்கள் அநேகம் பேர் `ஜாமின் வண்டி' ஆக இருக்கின்றனர் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

மோடி

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக நலத்திட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, ஜெய்ப்பூரில் 2100 கோடி ரூபாய் அளவுக்கான நலத்திட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், ``மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆளும் பாஜக நாட்டு மக்களின் நலனை மட்டுமே எண்ணத்தில் கொண்டுள்ளது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே  பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மோடி, வசுந்தரா ராஜே போன்ற பாஜக தலைவர்கள் பெயர்களை கேட்டாலே, எதிர்க்கட்சிகள் அச்சப்பட்டு புலம்பி தவிக்கின்றனர். இதற்கு காரணம் பா.ஜ அரசின் சாதனைகளை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

அவர்களுக்கு எப்போதும் வாரிசு அரசியலில் மட்டுமே நம்பிக்கை. அவர்கள் மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை செலுத்தியது கிடையாது. ஆனால், பா.ஜ.க அப்படிப்பட்டது கிடையாது.  நாங்கள்  செய்த சாதனைகளை, மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோர், குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் வழக்குகளில், ஜாமின் பெற்று வெளியில் இருக்கின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியை  'ஜாமின் வண்டி' என்றே அழைக்கலாம். ஏழைகள், விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!