வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (08/07/2018)

கடைசி தொடர்பு:10:11 (08/07/2018)

முதல்முறையாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர்!

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்  4 நாள் அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வரவுள்ளார்.

தென்கொரிய அதிபர்

தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன் முதல்முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று வரவுள்ள அவர் ஜூலை 11-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறும் பல்வேறு அரசு முறை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதிபருடன் அவரது மனைவி கிம் ஜங் சூக் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் பலரும் வரவுள்ளனர். அதிபரின் இந்த வருகையால் இரு நாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தென்கொரிய அதிபர், நாளை ஜூலை 9-ம் தேதி இந்தியா மற்றும் தென்கொரியா இடையிலான வணிக கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். பிறகு அதே நாளில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து  இருவரும் காந்தி ஸ்மிருதி செல்ல உள்ளனர்.  ஜூலை 10-தேதி ராஷ்ட்ரபதி பவனில் நடக்கும் சிறப்பு விருந்தில் கலந்துகொள்கிறார் மூன் ஜே இன். பிறகு ஹைதராபாத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். அன்று  இரு நாடுகளுக்கிடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதே நாளில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஷ்ட்ரபதி பவனில் நேரில் சந்திக்கிறார்.  தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படுகிறார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தென்கொரிய அதிபரின் வருகையால் பொருளாதார ரீதியில் இரு நாடுகளும் முக்கியத்துவம் அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.