வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (08/07/2018)

கடைசி தொடர்பு:11:15 (08/07/2018)

`நிபா வைரஸை சிறப்பாகக் கட்டுப்படுத்திய கேரள அரசு’ - கௌரவித்த அமெரிக்க நிறுவனம்

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம்  அதிகமாக இருக்கும் போது அதை சிறப்பான முறையில் கையாண்டு கட்டுப்படுத்தியதற்காகக் கேரள அரசுக்கு அமெரிக்க நிறுவனம் பாராட்டு விழா நடத்தியுள்ளது. 

பினராயி விஜயன் -நிபா வைரஸை சிறப்பாகக் கட்டுப்படுத்திய கேரள அரசு

Photo Credits : Twitter/@sijin_das

 நிபா வைரஸ் என்பது உயிரினங்களுக்குள் நோய் பரப்பும் வகையில் செயல்படும் ஒரு தொற்றுக் கிருமி. இந்த வைரஸ் வௌவால்கள் மற்றும் பன்றிகளில் இருந்து பரவுவதாக கூறப்பட்டு வந்தது. இது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கேரளாவை அச்சுறுத்திய மிகப்பெரும் நோயாக உருவெடுத்து வந்தது. நிபா வைரஸால் கேரளாவில் மட்டும் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு இந்த நோயின் அறிகுறிகள் காணப்பட்டு மிகவும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் கேரள அரசின் தீவிர நடவடிக்கையால் நிபா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. 

இந்நிலையில் நிபா வைரஸ் தாக்கத்தை சிறப்பாக கையாண்ட கேரள அரசுக்கும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அமெரிக்கா, பால்டிமோரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட் பாராட்டுவிழா நடத்தியது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்  சைலஜா ஆகியோர் கலந்துகொண்டனர். உயிரி மருத்துவ அறிவியலாளரும், வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் இணை நிறுவனருமான டாக்டர்.ராபர்ட் கேரள முதல்வருக்கு விருது வழங்கிக் கௌரவித்தார்.

விழாவில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ”மருத்துவ துறையை சர்வதேச தரத்தில் உயர்த்துவதுக்குக் கேரள அரசு முயற்சி செய்துவருகிறது” எனக் கூறினார். மேலும் பால்டிபர் வைராலஜி இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து கேரளாவில் வைராலஜி இன்ஸ்டிடியூட் அமைப்பது தொடர்பான தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.