ஹோட்டல் உரிமையாளரைத் தற்கொலைக்கு தூண்டிய டெல்லி 11 பேர் தற்கொலை

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்டதை தொலைக்காட்சியில்  பார்த்து, மும்பையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர்  தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

தற்கொலை

டெல்லியின் புராரி என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அவர்களின் வீட்டில் கிடைத்த சில குறிப்புகளும் நாட்டு மக்களின் மொத்த கவனத்தையும் புராரியை நோக்கித் திருப்பியுள்ளது. கடந்த வாரம் ஒரே வீட்டைச் சேர்ந்த 10 பேரில் கை, கண்கள் மற்றும் வாய் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியபடியும் 75 வயதான முதியவரின் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் எனப் 11பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களின் வீட்டில் இருந்து பல வித்தியாசமான விசயங்களைக்  காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். அதைவைத்துப் பார்க்கும் போது இறந்தவர்கள் அனைவரும் மூடநம்பிக்கையால் தற்கொலை செய்திருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த 11 பேரின் தற்கொலை தொடர்பாக ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்கள், போன்றவற்றில் புதுப்புது விசயங்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  மும்பை, கோரெகாவ் ஃபிலிம் சிட்டி பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணா ஷெட்டி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் தனது கணவரின் படுக்கை அறை திறக்காததால் சந்தேகமடைந்து அறையினுள் சென்ற மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அறையினுள் உள்ள ஃபேனில் கிருஷ்ணா தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பான போலீஸாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

கிருஷ்ணா நீண்ட காலமாக ஒரு ஹோட்டல் வைத்து நடத்திவருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹோட்டல் சரிவர ஓடவில்லை. நீண்ட நாள்களாகப் போராடியும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹோட்டல் தொடர்ந்து நஷ்டத்தை நோக்கியே சென்றுகொண்டிருந்தது. இதனால் கிருஷ்ணா மன உளைச்சலின் உச்சத்தில் இருந்துள்ளார். மேலும், அவர் கடந்த ஒரு வாரகாலமாக டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பார்த்து வந்ததாகவும் இந்தப் சம்பவத்தை பற்றியே தனது மகளிடம் அதிகம் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 11 பேரின் தற்கொலை பார்த்து அதன் எதிரொலியாகத் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனப் காவலர்கள் சந்தேகித்துள்ளனர். 

இது தொடர்பாக கிருஷ்ணாவின் மனைவி கூறுகையில் , “என் கணவர் நீண்ட நாள்களாக மன உளைச்சலில் இருந்துவந்தார். கடந்த ஒரு வாரமாக  டெல்லியில் 11 பேரின் தற்கொலை தொடர்பான செய்திகளையே தொலைக்காட்சியில் அதிகம் பார்த்துவந்தார். அதைப் பார்க்க வேண்டாம் என நான் பலமுறை அறிவுரை கூறினேன். ஆனால் அவர் தொடர்ந்து அந்தச் சம்பம் தொடர்பான செய்திகளை பார்ப்பதும், அதைப் பற்றியே அதிகமாகப் பேசியும் வந்தார்” எனப் கூறியுள்ளார். கிருஷ்ணாவின் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!