வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (08/07/2018)

கடைசி தொடர்பு:16:40 (08/07/2018)

அடிப்படைத் தேர்வில் தோல்வியடைந்த 119 ஐ.பி.எஸ் அதிகாரிகள்!

ஹைதராபாத் போலீஸ் அகாடமியில் நடத்தப்படும் அடிப்படைத் தேர்வில் 119  ஐ.பி.எஸ் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர். இதில், சட்டம் ஒழுங்கு மற்றும் உள்துறை பாதுகாப்பு பாடப்பிரிவில் பெரும்பாலானோர் தேர்ச்சி அடையவில்லை. 

 ஐ.பி.எஸ்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியில் சேர்வதற்கு முன் பயிற்சிகள் அளிக்கப்படும். ஐ.பி.எஸ் அதிகாரிகள்  இந்தியத் தண்டனைச் சட்டம், தடயவியல் மருத்துவம், தடயவியல் மற்றும் விசாரணை குற்றவியல், தடய அறிவியல், புலனாய்வு, ஆயுதங்களைக் கையாள்தல், நீச்சல், குதிரை சவாரி உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி,அண்மையில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு அடிப்படைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை மொத்தம் 136 பேர் எழுதினர். அதில் 14 பேர் பூடான், நேபாளம் மற்றும் மாலத்தீவு போன்ற வெளிநாட்டு போலீஸ் படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள். இந்த தேர்வில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தேர்வு எழுதிய இந்தியாவைச் சேர்ந்த 122 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 119 பேர் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.

இவர்களில், பெரும்பாலானோர் சட்டம் ஒழுங்கு மற்றும் உள்துறை பாதுகாப்பு பாடப்பிரிவில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். தேர்வில் தோல்வி அடைந்தாலும் அவர்களுக்கு பட்டங்கள் அளிக்கப்பட்டு, பயிற்சியைத் தொடருவார்கள்.  இந்த தேர்வில் தோல்வி அடைந்த அதிகாரிகளுக்கு, மீண்டும் தேர்ச்சி அடையக் குறைந்தபட்சம் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த வாய்ப்புகளில் தேர்ச்சி அடையவில்லை என்றால், அதிகாரிகள் தங்களது பணியைத் தொடர முடியாது. மொத்தம் 136 அதிகாரிகள் கொண்ட குழுவில் 133 பேர் இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் பிரிவு பாடங்களின் தோல்வி அடைந்துள்ளனர். இந்தத் தேர்வில் தோல்வி அடைந்த பெரும்பாலான அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பதக்கம் மற்றும் கோப்பைகளைப் பெற்றவர்கள்.