`கிளாஸிலே நுரையும் பிளேட்டிலே கறியும்!’ - சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் குழுவின் அட்மின்கள் மீது வழக்கு

மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அரசுகு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்ட ‘கிளாஸிலே நுரையும் பிளேட்டிலே கறியும்’ என்ற ஃபேஸ்புக் குழுவின் அட்மின்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

அட்மின்கள் மீது வழக்கு

முகநூல் வழியாக நல்ல தகவல்கள் மட்டும் அல்லாமல் அவசியமற்ற தகவல்களும் வந்து சேர்கின்றன. ஒரு சிலர் தங்களின் சுயநலத்துக்காக தவறான கருத்துக்களை பரப்புவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த அஜித்குமார், வினிதா தம்பதியினர் ஃபேஸ்புக்கில் ஒரு குழுவைத் தொடங்கி நடத்தி வந்தார்கள். ’கிளாஸிலே நுரையும் பிளேட்டிலே கறியும்’ என்ற பெயரில் இயங்கி வந்த அந்த ரகசியக் குழுவில், 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அந்த குழுவின் அட்மின்களாக அஜித்குமார் மற்றும் வினிதாவைத் தவிர்த்து மேலும் 38 பேர் அட்மின்களாக செயல்பட்டு வருகிறார்கள். அந்தக் குழுவில் மது போதையை வலியுறுத்தியும் குடிப்பழக்கத்துக்கு ஆதரவான வகையிலும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் கேரள அரசின் மதுக் கொள்கையைக் கண்டித்தும் மதுக்கடைகளைக் குறைக்க எடுக்கபப்ட்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்தும் கருத்துக்களை பதிவேற்றி வந்துள்ளனர். 

இதுதொடர்பாக கலால் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததால், குழுவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கினார்கள். அப்போது இந்த குழுவானது சில தனியார் மது தயாரிப்புத் தொழிற்சாலைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. அத்துடன், நிரம்பி வழியும் மதுக் கோப்பையின் அருகில் ஒரு வயதுக் குழந்தை அமர்ந்து இருப்பது போலவும் சர்ச்சைக்குரிய படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருதது தெரிய வந்தது. 

அதனால் குழுவைத் தொடங்கிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜீத்குமார், வினிதா ஆகியோர் மீது கேரள கலால் துறைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தவிர எஞ்சிய 38 அட்மின்களையும் வழக்கில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மது தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்று, இந்த குழு செயல்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். 

இந்த சம்பவம் பற்றி பேசிய கேரள கலால்துறை கமிஷனரான ரிஷிராஜ் சிங், ‘’தொடர்ச்சியாக அந்த குழு குறித்து புகார் வந்ததால் கண்காணித்து வந்தோம். அப்போது சட்டத்துக்குப் புறம்பான பல தகவல்கள் அதில் வந்ததை கண்டுபிடித்தோம். அவற்றைக் கொண்டு வழக்குப் பதிவு செய்துள்ளோம். கலால் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்ப்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்’’ என்றார். 

இந்த குழுவில் 18 லட்சம் உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், குழுவை முடக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்தை கேரள கலால்துறை வலியுறுத்த இருக்கிறது. அரசின் மதுக்கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்திருப்பதால், இந்த வழக்கு விவகாரம் குறித்து கேரள அரசுக்கும், கலால்துறை அறிக்கை அனுப்பி இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!