50 வயதைக் கடந்தவர்கள் அரசு வேலையில் நீடிப்பதில் சிக்கல்! - சர்ச்சையில் உ.பி அரசு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 50 வயதை கடந்தவர்கள் அரசு வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் வேலை திறன் குறித்த ஆய்வுக்குப் பின்னரே பணியில் நீடிக்க வைப்பதா அல்லது கட்டாய ஓய்வு அளிப்பதா என முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அரசு வேலை - ஊழியர்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதில், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் 50 வயதைக் கடந்த நிலையில், பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில், 50 வயதைக் கடந்து அரசு வேலையில் தொடர்பவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஜூலை 31-ம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகுல் சிங்கால் கையெழுத்துடன் கடந்த 6-ம் தேதியிட்ட அந்த ஆணையில், ’’அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளும் தங்களுடைய துறைகளில் 50 வயதைக் கடந்து பணியாற்றும் பணியாளர்களைத் தகுதிச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களுடைய உடல் தகுதி, வேலை செய்யும் திறன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும். அதில் உரிய தகுதி இல்லாதவர்களை, உடனடியாக கட்டாய ஓய்வுக்கு அனுப்பி விட வேண்டும். 

2018 மார்ச் 31-ம் தேதியில் 50 வயதை எட்டியவர்கள் அனைவரையும், இந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு, ஜூலை 31-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்பப்பட வேண்டும். அரசுத் துறைகளில் பணியாற்றும் நிரந்த பணியாளர்கள் மட்டும் அல்லாமல், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். அதனால் ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்த பட்டிலையும் எடுத்து, தகுதிச் சோதனை நடத்த வேண்டும்’’ என உத்தரவிடப்பட்டுள்ளது. 

யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநில அரசின் இந்த முடிவு, அரசு ஊழியர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. இதுபற்றி பேசிய தலைமைச் செயலக பணியாளர்கள் சங்கத்தின் தலைவரான யாதவேந்திரா மிஸ்ரா, ’’அரசின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஊழியர்களை கலவரப்படுத்துவதாக இருக்கிறது. ஏற்கெனவே பல முறை இதுபோன்ற முயற்சிகள் உ.பி-யில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைச் சாத்தியமாகவில்லை. இருந்தாலும், அரசின் இந்த முடிவு தொடர்பாக 9-ம் தேதி அனைத்து தொழிற்சங்கத்தினரிடமும் கலந்து பேசி உரிய முடிவை அறிவிப்போம்’’ எனத் தெரிவித்தார்.    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!