புதிய கல்விக்கொள்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு!

புதிய கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை

கடந்த 1986-ம் ஆண்டு கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. இது 1992-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. இதையடுத்து புதிய கல்விக்கொள்கையை உருவாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.ஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசின் மனிதவளத்துறையிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை மூலம் கல்வியாளர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. இதில், சில கொள்கைகளுக்கு சில மாநில அரசுகளும் கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனால், மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதிய கல்விக்கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்குப் புதிய குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

கல்வி

அதன்படி  விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர்குழு புதிய கல்விக்கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. இந்தக் குழு அறிக்கையை கடந்தாண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்ய வலியுறுத்தப்பட்டது. உரிய காலத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய முடியாத காரணத்தினால், கடந்த மாதம் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்தது மத்திய அரசு. இந்தக் கால அவகாசமும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஆகஸ்ட் 31- ம் தேதி  வரை மீண்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!