``என்னை சிலுவையில் அறைந்து வாக்குகளை அறுவடை செய்யப் பார்க்கிறார்கள்" - விஜய் மல்லையா

வங்கி மோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்பட்டுவருபவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் விஜய் மல்லையாவின் சொத்துகளை ஏலம் மூலம் விற்று வங்கிக் கடனை அடைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

விஜய் மல்லையா

இது தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. அங்கு இருக்கும் அவரது சொத்துகளைக் கைப்பற்ற அந்நாட்டு நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் பார்வையாளராகக் கலந்துகொண்ட விஜய் மல்லையா பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸ்க்குப் பேட்டி அளித்துள்ளார். கார் பந்தயத்தில் ஃபோர்ஸ் இந்தியா அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் அவரால் மற்ற நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.  

விஜய் மல்லையா, ``எனது பெயரில் இருக்கும் சொத்துகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், எனது வீடு, என் மகன் பெயரிலும், லண்டனில் இருக்கும் வீடு என் அம்மாவின் பெயரிலும்தான் உள்ளது. அதை அவர்கள் எடுக்க முடியாது. இங்கிலாந்து நீதிமன்றத்தில் எனது சொத்துகளின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளேன். அதை அவர்கள் முடக்கவோ அல்லது கைப்பற்றி வங்கிகளிடம் கொடுக்கவோ செய்யலாம். எனது பெயரில் சில கார்களும், கொஞ்சம் நகைகளும்தான் உள்ளன. அதை அவர்கள் எப்போது வந்தாலும் தரத் தயாராக உள்ளேன். எப்போது, எங்கு, எந்நேரம் வருவீர்கள் எனச் சொல்லிவிட்டே வாருங்கள். நான் வீடில்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இறுதியில் எனது பெயரில் இருக்கும் சொத்துகள் மீது மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அதைத் தாண்டி அவர்களால் எதையும் எடுக்க முடியாது.

இந்தியாவில் இருக்கும் சொத்துகளின் பட்டியலை கர்நாடகா நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பித்து விட்டேன். அதன் சொத்து மதிப்பு எனது கடன்களை அடைக்கப் போதுமானதாகதான் உள்ளது என நினைக்கிறேன். இந்தியாவில் எனது பெயரில் இருக்கும் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், என் தந்தையிடமிருந்து எனக்கு வந்த சொத்துகளைக் கைப்பற்ற அவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், அதையும் அவர்கள் முடக்கியுள்ளனர். இது அநீதி. 

நான் எப்போதுமே இங்கிலாந்து நாட்டின் குடிமகன்தான். இந்தியக் குடிமகன் இல்லை. அப்படி இருக்க நான் கடன் வாங்கிவிட்டு ஓடிவிட்டதாக எப்படிக் கூறமுடியும். இப்போது தேர்தல் காலம். அதனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால், அவர்கள் என்னை இந்தியா கொண்டு சென்று சிலுவையில் அறைந்து வாக்குகளை அறுவடை செய்யப் பார்க்கிறார்கள். அதற்குத்தான் நான் தேவை அவர்களுக்கு” என்றார். இந்தியாவில் அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!