வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (09/07/2018)

கடைசி தொடர்பு:11:31 (09/07/2018)

`எங்களால்தான் மோடி பிரதமரானார்’ - பா.ஜ.க-வை சீண்டும் மல்லிகார்ஜூன கார்கே

`70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை நாங்கள் காப்பாற்றியதால்தான் டீ விற்றவர்கள் பிரதமராக முடிந்திருக்கிறது' என்று நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார் மகாராஷ்டிரா காங்கிரஸ் பொதுச் செயலாளர் மல்லிகார்ஜூன கார்கே. 

மோடி

(Photo Credit -ANI)

இந்திரா காந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தைப் பற்றி அண்மையில் பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சித்துப் பேசினர். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் வலைப்பக்கத்தில், 1975-ம் நடந்த அவசரக்கால பிரகடனம் குறித்து மூன்று தொடர் கட்டுரைகள் வெளியிட்டார். அதில், `இந்திரா காந்தியும், ஹிட்லரும் அரசியலமைப்பை ஒருபோதும் ரத்து செய்ததில்லை. அவர்கள் குடியரசு அரசியலமைப்பைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைச் சர்வாதிகாரமாக மாற்றினர்' என்று குறிப்பிட்டு இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டார். இது காங்கிரஸ் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே, `பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், நாட்டுக்காக கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார். நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றியதால்தான், அவரைபோன்று டீ விற்றவர்கள் பிரதமராக முடிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 43 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த எமர்ஜென்சியைப் பற்றி பேசிவருகிறார் பிரதமர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பற்றி அவரின் கருத்து என்ன? விவசாயிகள் தற்கொலை; விவசாய திட்டங்கள் தோல்வி; விவசாயக் கடன் பெற முடியாத சூழல்; மேலும், வர்த்தகத்தின் வேகம் குறைந்துள்ளது' என்று மோடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.