வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:15:21 (09/07/2018)

சர்ச்சையைக் கிளப்பிய ஃபேஸ்புக் அட்மின்கள் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

கேரளாவில் அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மது ஆலை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட ஃபேஸ்புக் குழுவின் அட்மின்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கேரளாவில் அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மது ஆலை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட ஃபேஸ்புக் குழுவின் அட்மின்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

ஃபேஸ்புக் குழு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜீத்குமார், அவரின் மனைவி வினிதா ஆகியோர் முகநூலில், ’கிளாஸிலே நுரையும் பிளேட்டிலே கறியும்’ என்ற பெயரில் ரகசியக் குழுவைத் தொடங்கினார்கள். அதில், 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்தக் குழுவில் மது போதையை வலியுறுத்தியும் குடிப்பழக்கத்தை ஆதரித்தும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் கேரள அரசின் மதுக் கொள்கையைக் கண்டித்தும் மதுக்கடைகளைக் குறைக்க கேரள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை எதிர்த்தும் கருத்துகளைப் பதிவு செய்தனர். 

இது தொடர்பாக கேரள கலால் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன், நிரம்பி வழியும் மதுக் கோப்பையின் அருகில் ஒரு வயதுக் குழந்தை அமர்ந்து இருப்பதுபோல சர்ச்சைக்குரிய படம் பதிவேற்றப்பட்டதால் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே அஜீத்குமாரும் வினிதாவும் தலைமறைவானதால், அவர்களைப் போலீஸார் தேடி வருகிறார்கள். 

இந்த நிலையில், இருவரின் சார்பாக திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், `கிளாஸிலே நுரையும் பிளேட்டிலே கறியும்’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் போலியாக குழு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மது போதையை வலியுறுத்தும் அத்தகைய குழுக்கள் மீது நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், போலீஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.