வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (09/07/2018)

கடைசி தொடர்பு:15:40 (09/07/2018)

தாஜ்மஹால் தொழுகை நடத்துவதற்கான இடமல்ல - உச்ச நீதிமன்றம்

`தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தாஜ்மஹால்

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலில்,  வெளி ஆட்கள் வந்து தொழுகை நடத்துவதற்குக் கடந்த  ஜனவரி மாதம் ஆக்ரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. உள்ளூர் வாசிகள் மட்டும் உரிய அடையாள அட்டையுடன் வந்து வெள்ளிக்கிழமைதோறும் தொழுகை செய்யலாம் எனக் கூறியிருந்தது. 

இதை எதிர்த்து, தாஜ்மஹால் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த சையது இப்ராஹிம் ஹுசைன் ஸைதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், வருடம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் தாஜ்மஹாலைப் பார்வையிட வருகின்றனர். அப்படி வருபவர்கள் அங்கு தொழுகை நடத்துவதை ஆக்ரா மற்றும் தாஜ்மஹால் நிர்வாகம் கட்டுப்படுத்துவது சட்டவிரோதமானது எனத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூசன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளூர் வாசிகளைத் தவிர மற்ற சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலில் தொழுகை நடத்துவதை அனுமதிக்க முடியாது எனக் கூறினர்.  ‘தாஜ்மஹால், 7 உலக அதிசயங்களில் ஒன்று என்பதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும். அது, தொழுகை செய்வதற்கான இடமில்லை. அதற்குப் பல இடங்கள் உள்ளன' எனக் கூறி, இந்த மனுவைத் தள்ளுபடிசெய்து  உத்தரவிட்டனர்.