வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (09/07/2018)

கடைசி தொடர்பு:16:20 (09/07/2018)

காணாமல்போன சகோதரர் தீவிரவாதியானார்! அதிர்ச்சியில் ஐ.பி.எஸ் அதிகாரி

இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல்போன ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர், தீவிரவாத அமைப்பில் இணைந்து கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதியான ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர்

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த  25 வயதான ஷம்சுல் ஹக் மெங்னூ என்ற இளைஞர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போனார். இவர் இனாமுல் என்ற ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர். ஷம்சுல், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் யுனானி மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.  கடந்த மே மாதம் முதல் ஷம்சுலை காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி காவலர்களும் அவரை நீண்ட நாள்களாகத் தேடிவந்துள்ளனர். 

இந்நிலையில், ஷம்சுல் தன் கையில் ஏகே 47 துப்பாக்கியுடன் நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படத்தைத் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் அவரின் பெயர், தீவிரவாத அமைப்பின் பெயர், ஷம்சுலின் தந்தை பெயர், அவருக்கான குறியீடு, ஷம்சுல் தீவிரவாத அமைப்பில் இணைந்த தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள புகைப்படத்தின் நம்பகத் தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் ஷம்சுலுடன் சேர்த்து இதுவரை, படித்த இளைஞர்கள் நான்கு பேரை தங்களின் கைகளில் துப்பாக்கியுடன் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.