உற்சாகமாக வாரத்தைத் தொடங்கியது சந்தை; மாத உயர்வை எட்டியது சென்செக்ஸ்!    09-07-2018 | Share market for the day at close 09-07-2018

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (09/07/2018)

கடைசி தொடர்பு:17:13 (09/07/2018)

உற்சாகமாக வாரத்தைத் தொடங்கியது சந்தை; மாத உயர்வை எட்டியது சென்செக்ஸ்!    09-07-2018

இன்று, வர்த்தக நேரம் தொடங்கியதிலிருந்தே காளைகளின் ஆதிக்கம் மிகுந்திருந்த காரணத்தால், இந்திய பங்குச் சந்தையில் இந்த வாரத் தொடக்கம் கோலாகலமாக அமைந்துவிட்டது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 276.86 புள்ளிகள். அதாவது, 0.78 சதவிகிதம் உயர்ந்து 35,934.72 எனக் கடந்த ஐந்து மாதங்களில் கண்டிராத உச்சத்தில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 80.25 புள்ளிகள். அதாவது, 0.74 சதவிகிதம் முன்னேறி 10,852.90-ல் முடிவுற்றது.

இன்று, அனைத்துத் துறைகளிலுமே பல முக்கியப் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்ததால், அனைத்துத் துறைகளின் குறியீடுகளுமே முன்னேற்றம் கண்டன. மருத்துவம், கேப்பிட்டல் கூட்ஸ், பவர், ஆயில் மற்றும் உலோகத் துறைகளைச் சேர்ந்த பங்குகள் பெரும்பாலும் நல்ல லாபம் கண்டன.

சந்தையின் இன்றைய முன்னேற்றத்திற்கான காரணங்கள் :

ஜூன் மாதத்திய அமெரிக்க ஜாப்ஸ் ரிப்போர்ட் உற்சாகமூட்டக்கூடிய அளவில், எதிர்பார்த்ததைவிட அதிகமாக அமைந்தது. வெள்ளியன்று, அந்நாட்டின் சந்தையில் பாசிட்டிவான போக்கிற்கு உதவியது மட்டுமின்றி, ஊதிய உயர்வு விகிதம் குறைந்திருப்பது, உடனடியான வட்டி விகித உயர்வுக்கு வாய்ப்பளிக்காது என்பதும் ஒரு சாதகமான விஷயமாகும்.

ஆசிய சந்தைகளிலும் இன்று நல்ல உற்சாகமான நாளாகவே அமைந்தது. சீனாவின் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிவிதிப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், அந்நாட்டு சந்தையில் பங்குகள் வெகுவாக உயர்ந்து, ஷாங்காய் முக்கியக் குறியீடு சுமார் 2.5 சதவிகிதம் முன்னேறியது. ஜப்பானிய சந்தையும், மே மாதத்துக்கான நடப்பு கணக்கு சர்ப்ளஸ் எதிர்பார்த்ததைவிட அதிகமாக குடியிருப்பதாக வந்த அறிக்கையால் நல்ல முன்னேற்றம் கண்டது.

ஐரோப்பிய சந்தைகளிலும் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பொருளாதார அறிக்கைகள் திருப்திகரமான முறையில் அமைந்திருப்பதால், ஏறுமுகமே தெரிகிறது.

டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சென்ற தினத்தைவிட சற்று கூடியிருப்பது சந்தையின் மனநிலையை பாசிட்டிவாக வைத்திருக்க உதவியது. ரூபாயின் மதிப்பு டாலருக்கு 68.77 என தற்போது இருந்தாலும், இன்றைய வணிகத்தில் அது டாலருக்கு 68.56 என்று ஒரு கட்டத்தில் எட்டியிருந்தது.சென்ற தினத்தின் முடிவில் அது டாலருக்கு 68.88 என்று இருந்தது.

வெளிவரவிருக்கும் இந்திய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் உற்சாகமூட்டக்கூடும் என்ற நம்பிக்கையும், முதலீட்டாளர்களை பங்குகள் வாங்கத் தூண்டியது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஏசியன் பெயின்ட்ஸ் 
யெஸ் பேங்க் 
வேதாந்தா 
டாக்டர் ரெட்டி'ஸ் 
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 
ஆக்ஸிஸ் பேங்க் 
சிப்லா 

டைம் டெக்னோபிளாஸன்ட்  13%
ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் 13%
வீ மார்ட் ரீடைல் 9.4%

விலை சரிந்த பங்குகள் :

கிர்லோஸ்கர் ஆயில் 3.1%
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 2.7%
டாடா கன்சல்டன்சி சர்விசஸ் 1.5%
அல்ட்ராடெக் சிமென்ட்  1.5%
AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 5.4%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1708 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 977 பங்குகள் விலை சரிந்தும், 166  பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.