ஐக்கிய ஜனதா தளம் திடீர் முடிவு: பி.ஜே.பி. கூட்டணியில் நீடிப்பாரா நிதிஷ்குமார்?

பரபரப்பான இந்தச் சூழலில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியச் செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்று முடிந்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் திடீர் முடிவு: பி.ஜே.பி. கூட்டணியில் நீடிப்பாரா நிதிஷ்குமார்?

பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டது எனலாம்.

நரேந்திர மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது பி.ஜே.பி. அந்தத் தேர்தலில் தமிழக மக்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் மோடி மீதும், பி.ஜே.பி மீதும் மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர். தவிர, 2004-ம் ஆண்டு முதல் பத்தாண்டுக்கால மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான மக்களின் வெறுப்பு உணர்வும் பி.ஜே.பி தலைமையில் மத்தியில் ஆட்சியமைய முக்கியக் காரணமாக அமைந்தது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகே காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க கூட்டணி அமைத்ததாலும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் இணைந்து பி.ஜே.பி அந்தத் தேர்தலைச் சந்தித்ததாலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் வாக்குகள் பிரிந்து, அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக அமைந்தது. மேலும், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வும் அப்போது பலம் வாய்ந்த கட்சியாக இருந்ததால், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் தமிழகம், மேற்குவங்கம், பீகார் மாநிலங்களைத் தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலும் பி.ஜே.பி அலையே வீசியது. கன்னியாகுமரி தொகுதியில் பி.ஜே.பி-யின் பொன்.ராதாகிருஷ்ணனும் தருமபுரியில் பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸும் மட்டுமே பி.ஜே.பி கூட்டணி சார்பில் வெற்றிபெற முடிந்தது.

நிதிஷ் குமார்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பீகாரில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி அரசு அமைந்த போதிலும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் நிதிஷ்குமார் பல்வேறு பிரச்னைகளில் முரண்பட்டதால், மெகா கூட்டணியிலிருந்து வெளியேறி, பி.ஜே.பி-யுடன் இணைந்து மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார். பி.ஜே.பி-யுடன் நிதிஷ் கூட்டணி அமைத்ததை எதிர்த்து சரத்யாதவ் உள்ளிட்ட சில தலைவர்கள் விரும்பவில்லை. இதற்கிடையே நிதிஷ்குமாருக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் பி.ஜே.பி கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் வெறியேறி, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பார் என்றும் பரவலாகத் தகவல்கள் வெளியாகின.

மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பி.ஜே.பி கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. பீகாரைப் பொறுத்தவரை, அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என இரு கட்சிகளுமே தீவிரமாக இருந்ததால், இந்த முரண்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பரபரப்பான இந்தச் சூழலில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியச் செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் அரசியல் விவகாரம் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் நிதிஷ்குமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய் குமார், "மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும் பி.ஜே.பி-யும் இணைந்து போட்டியிடும். தொகுதிப் பங்கீடு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்றார்.

அமித் ஷா உடன் நிதிஷ் குமார்நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து வரும் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷா, வரும் 12-ம் தேதி பாட்னா செல்கிறார். அப்போது அமித்ஷாவுடன் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசுவார் என்றும் தொகுதிப் பங்கீடு குறித்து அப்போது முடிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பதை வைத்தே பி.ஜே.பி-யுடனான கூட்டணி தொடர்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று நிதிஷ்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாராம்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் பி.ஜே.பி-க்கு ஆதரவாகவோ உதவியாகவோ அல்லது எதிராகவோ இல்லை. அனைத்து மாநிலங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிட முடியும். எங்கள் கட்சியின் கொள்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,  

பீகாரைப் பொறுத்தவரை நிதிஷ்குமார், மாநிலத்துக்கு சிறப்புப் பொருளாதார அந்தஸ்து மற்றும் மத்திய அமைச்சரவையில் பதவி ஆகிய இரண்டையும் எதிர்பார்த்துள்ளார். ஆனால், இரண்டிலும் பி.ஜே.பி. இதுவரை குறிப்பிடத்தக்க முடிவை எடுக்காததால், நிதிஷ்குமார் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. தன் அதிருப்தியை அவர் மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியில் நிதிஷ்குமார் இணைவார் என்று பரவலாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரியவந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், "ஆர்.ஜே.டி தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை அக்கட்சி முதலில் தெளிவுபடுத்தட்டும். ஆர்.ஜே.டி போன்ற ஊழல் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி சேருகிறதா என்பதைத் தெளிவுபடுத்திய பிறகே, எங்களின் நிலைப்பாடு என்ன என்பதை வெளியிடுவோம். மணிப்பூர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் பி.ஜே.பி கூட்டணி இல்லாமலேயே ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைப் பொறுத்தே எங்களின் முடிவு அமையும். ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரை தனித்துப் போட்டியிடத் தயார். சில ஊடகங்கள் பி.ஜே.பி-க்கு நாங்கள் உதவி செய்து வருவதாகக் கூறுகின்றன. நாங்கள் பி.ஜே.பி-க்கு ஆதரவாகவோ எதிராகவோ இல்லை" என்றார்.

இதற்கிடையே பீகார் மாநிலப் பி.ஜே.பி தலைவர் ராஜேந்திர சிங், "இரு கட்சிகளுக்கும் இடையே எந்தவிதப் பிளவும் இல்லை. பீகாரில் பி.ஜே.பி தனித்துப் போட்டியிட்டால்கூட 75 சதவிகித இடங்களைக் கைப்பற்றும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அதிக இடங்கள் கிடைத்தால், அந்தக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் என்று தெரிகிறது. அதேநேரத்தில் பி.ஜே.பி கூட்டணியையும் உடனடியாக விட்டு விலக அக்கட்சி தயாரில்லை என்றே தெரிகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்பாக, அதாவது, வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குள் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்துவிடும். பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓரிரு கட்சிகள் ஏற்கெனவே விலகியுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் வெளியேறுமா அல்லது தொடர்ந்து அந்தக் கூட்டணியிலேயே நீடிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

ஐக்கிய ஜனதா தளம், பி.ஜே.பி கூட்டணியைவிட்டு வெளியேறுமானால், பீகார் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகலாம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கும் ஐக்கிய ஜனதா தளம் தயாராக இருக்க வேண்டும்...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!