கத்துவா வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம் ஆணை

கத்துவா வழக்கை விசாரித்துவரும் நீதிபதிக்கு, உரிய பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கத்துவா

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில்,  எட்டு வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலையும் செய்தது. சிறுமியின் உடல், ஒரு வாரத்துக்குப் பிறகு காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில், ஒரு சிறுவன் உட்பட  எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இச்சம்பவத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யவே பல்வேறு தடைகளைக் கடக்கவேண்டியிருந்தது. முதலில், இந்த வழக்கு கத்துவா நீதிமன்றத்தில் நடைப்பெற்றுவந்தது. காஷ்மீர் மாநிலத்தில் இந்த வழக்கு நடைப்பெற்றால் எங்களுக்கு நீதி கிடைக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கை பதான்கோட்  மாவட்ட நீதிபதி தேஜ்விந்தர் சிங் விசாரித்துவருகிறார்.

இந்நிலையில்,  கத்துவா வழக்கை விசாரித்துவரும் நீதிபதிக்கும், வழக்கறிஞருக்கும்  உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்  என பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை முழுவதும் கேமரா மூலம் பதிவுசெய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கத்துவா மாவட்டச் சிறையிலிருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!