மத அரசியலில் சிக்கி தவிக்கும் கத்துவா, மண்ட்செளர் பாலியல் வன்முறை வழக்குகள்! #Kathua

ஒரு சிறிய ஆன்மாவைப்  பறித்து, மற்றோரு ஆன்மாவைப் தத்தளிக்க விட்டு வேடிக்கை பார்த்து நிற்கும் இந்தச் சமூக அரக்கனை ஒழிக்கப் போராடுவது சரியா? அல்லது இவர்கள் எந்த மதத்தைச்  சார்ந்து இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து, அதில் அரசியல் லாபம் அடையும் சில இழிவான மனிதர்களுக்கு கொடித் தூக்கி நிற்பது சரியா?! 

மத அரசியலில் சிக்கி தவிக்கும் கத்துவா, மண்ட்செளர் பாலியல் வன்முறை வழக்குகள்! #Kathua

பெண்களையும், பெண் குழந்தைகளையும் இதைவிட ஒரு நாட்டில் துச்சமாக நடத்திவிடமுடியாது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே அதிகரித்துவிட்டன என்று கூறிவிட முடியாது. டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவியின் கொலைக்குப் பிறகு, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பரவலாகப் பேசப்படுகின்றன, அதனால் உலகின் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. என்றாலும், நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு இன்னும் சிக்கலாகிக்கொண்டேதான் போகிறது. 

கத்துவா

கத்துவா சிறுமி பாலியல் வன்முறை வழக்கு நாட்டையே உலுக்கி, அதற்கு எதிரான  போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற இந்த நேரத்தில், கடந்த ஜூன் 26ம் தேதி, மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள மண்ட்செளர் பகுதியில், எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, அவளை கொலை செய்யவும் முயற்சி நடந்திருப்பது, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனதில் தீயை வாரி இரைத்திருக்கிறது. அந்தக் குழந்தை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, அவளைக் கடத்தி பாலியல் வன்முறை செய்துள்ளனர். பின்னர், அந்தச் சிறுமி யாரிடமும் இதைப் பற்றி சொல்லிவிடக் கூடாது என, அவள் கழுத்தை கத்தியால் அறுத்திருக்கின்றனர். இந்தக் கொடூர  சம்பவத்துக்குக் காரணமான  இர்ஃபான் என்கிற 20 வயது இளைஞரும், அசிஃப் என்கிற 24 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இப்படி நிர்பயா வழக்கு, உன்னாவ் பாலியல் வழக்கு, கத்துவா சிறுமி பாலியல் வழக்கு, மண்ட்செளர் பாலியல் வழக்கு எனப் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரங்களை அடுக்கிக்கொண்டே  போகலாம். இவை தவிர, பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை,  அலுவலகத்தில் வேலைசெய்யும் பெண்களிடம் அத்துமீறல் என எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு பாலியல் கொடுமைக்கு தினம் தினம் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் இந்தியப் பெண்கள். ஆனால், இதற்கான நிரந்தரத் தீர்வுகளோ கடுமையான சட்டதிட்டங்களோ இங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது கசப்பான உண்மை.  

இதைவிடவும் கொடூரம் என்னவென்றால், கத்துவா சிறுமி பாலியல் வழக்கிலும், மண்ட்செளர் வழக்கிலும் நுழைக்கப்பட்டுள்ள மத அரசியல். இத்தகைய மனோபாவமும் செய்தி பரப்பல்களும் இந்த வழக்குகளுக்கும், பெண்களுக்கு எதிரான சமூக பிரச்னைகளுக்கும் எந்த ஒரு தீர்வுயையும் அளிக்காது.  மாறாக, இதனை அரசியலாக்கி, சிக்கலாக்கி, காலப்போக்கில் வெறும் காகிதங்களில் மட்டுமே  இடம்பெற்ற வழக்காக மாற்றி, ஏதோ ஒரு காவல் நிலையத்தில் மூலையில் கிடக்கச் செய்யும்.

பாலியல் வன்முறை

கத்துவா சிறுமி பாலியல் வன்முறைக்கு, சர்வதேச இஸ்லாம் அமைப்பான ‘ஜிஹாத்’தான் காரணம் என்று, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான சஞ்ஜி ராமின் வழக்கறிஞர் குறிப்பிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில், சிறுமியின் குடும்பத் தரப்பு வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவத் பற்றியும், அவருக்கு ஆதரவாக இருப்பவர்களைப் பற்றியும் அவதூறான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுப்பதாக, மதத்தை முன்நிறுத்தி சிலர் விவாதித்து வருகின்றனர். இப்படி நீயா, நானா போட்டியில், இரண்டு மதங்களுக்கு ஆதரவும், விமர்சனமும், எதிர்ப்பும் தெரிவித்து, மாறி மாறி வசைபாடுவதிலேயே நியாயமான கோபங்களையும் ஆதங்கங்களையும் கரைத்துவிடுகின்றனர். உதாரணமாக, இந்த இரண்டு சம்பவத்தையும் ஒப்பிட்டு, 'கத்துவா சிறுமிக்கு ஆதரவாக எழுந்த குரல்களும் போராட்டங்களும், ஏன் இந்தச் சிறுமிக்கு எழவில்லை?' என்ற ரீதியில், மதச் சார்புடன் சில ஊடகங்களும், சமூக அமைப்புகளும் நடந்துகொள்கின்றன. அவர்களுக்கு பதில் தரும் நோக்கில், 'இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது' என நியாயங்களை முன்வைக்கிறது மற்றொரு தரப்பு. 

ஆனால், சற்றே அந்தச் சிறுமிகளையும் அவர்களின் குடும்பங்களையும் நினைத்துப் பாருங்கள்.

இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்.
இருவருக்குமே அதே கொடூரம்தான் நடந்திருக்கிறது.
இதில், ஒரு தேவதை இறந்தேவிட்டாள்; மற்றோரு தேவதை அந்தப் போன உயிர் பிடித்து மெள்ள மெள்ள மீண்டும் வருகிறாள்.
இரண்டு குடும்பங்களுமே நியாயத்துக்காக நீதிமன்ற வாசலில் மன்றாடி நிற்கின்றன. 
இதில் உங்களின் அரசியலையும், மதச்சார்பையும் நுழைப்பது நியாயம்தானா? 
குழந்தைகளையும் பாலியல் பண்டமாகப் பார்க்கும் சமூக அரக்கன்களை ஒழிக்கப் போராடுவது சரியா? அல்லது, இவர்கள் எந்த மதத்தைச்  சார்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் யார் பக்கம் நிற்பது என்ற முடிவெடுத்து, அதில் அரசியல் லாபம் அடையும் சில இழிவான மனிதர்களுக்கு, 'ஆம் அப்படித்தான்' என்று கொடி தூக்கி நிற்பது சரியா?! 

நீங்கள் முடிவு செய்யுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!