வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:09:00 (10/07/2018)

மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு - ஓரினச் சேர்க்கை வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணையை இன்று உச்ச நீதிமன்றம் தொடங்குகிறது. மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், அதை நிராகரித்து வழக்கு விசாரணையைத் தொடங்குகிறது. 

உச்ச நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை

இந்திய தண்டனைச் சட்டத்தில் 377-வது பிரிவில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம். இந்தச் சட்டத்தின் கீழ் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க முடியும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமில்லை என தீர்ப்பளித்தது. டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடந்த 2013 டிசம்பரில் ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என அறிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் தண்டனைச் சட்டம் 377-வது பிரிவை மறு ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இதையடுத்து, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க முடியாது, திட்டமிட்டபடி வழக்கு விசாரணை நடக்கும் என உத்தரவிட்டது. எனவே, நீபதிகள் ஆர்.எப்.நாரிமன், கன்வில்கர், சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு 377-வது பிரிவை மறு ஆய்வு செய்ய உள்ளது.