வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:10:00 (10/07/2018)

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை - எச்சரிக்கை விடுக்கும் இந்திய வானிலை!

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் சாலைகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் போக்குவரத்துச் சேவை முடங்கியுள்ளது.

மும்பை

(Photo Credit -ANI)

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகர் பகுதிகளில் பேய் மழை கொட்டித் தீர்க்கிறது. கடந்த 6-ம் தேதி முதல் பெய்து வரும் மழை காரணமாக குடியிருப்புப் பகுதிகள், ரயில் நிலையங்கள், சந்தைகள் உட்பட பொது இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், போக்குவரத்துச் சேவை முடங்கியுள்ளது. மும்பை, தானே, ராய்காட், பால்கர் உள்ளிட்ட முக்கிய மாவட்டப் பகுதிகள் பெரு வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ளன. பால்கர் மாவட்டம், வசை (vasai) நகர் பகுதியில் புகுந்த வெள்ள நீரால் சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

மழை

(Photo Credit -ANI)

இந்நிலையில், கிரேட்டர் மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (ஜூலை 10) முதல் 13-ம் தேதி வரை கனமழை அல்லது மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.