வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (10/07/2018)

கடைசி தொடர்பு:11:12 (10/07/2018)

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைதுசெய்யத் தடை!

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தையும் கைதுசெய்ய விதித்த தடையை நீட்டித்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ப சிதம்பரம்

சென்னையைச் சேர்ந்தவர், தொழிலதிபர் சிவசங்கரன். அவர், ஏர்செல் என்ற செல்போன் சேவை நிறுவனத்தை ஆரம்பித்தார். ஏர்செல் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்குக் கைமாறியது. மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூபாய் 3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, 2006-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரை அடுத்து, கடந்த வருடம் ப.சிதம்பரத்தின் அலுவலகங்கள் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தியது பரபரப்பாகப் பேசப்பட்டது. 

இதற்கிடையே, சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனைத் தொடர்ந்து, ஆஜராகும்போது கைதுசெய்யப்படலாம் என்று தகவல் பரவியதை அடுத்து, முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரணை செய்தார். அப்போது, மறு உத்தரவு வரும் வரை ப.சிதம்பரத்தைக் கைதுசெய்ய இடைக்காலத் தடை விதித்ததுடன், அமலாக்கத்துறை பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்தத் தடையை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதேபோல் கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க