சர்ச்சைக்குரிய பேச்சு - தெலுங்கு இயக்குநருக்கு தடை விதித்த போலீஸ்!

இந்துக் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கு இயக்குநருக்கு ஹைதராபாத் நகருக்குள் நுழைய தெலங்கானா போலீஸ் தடை விதித்துள்ளது. 

கத்தி மகேஷ்

தெலுங்கு சினிமா இயக்குநர், நடிகராக இருப்பவர் கத்தி மகேஷ். இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதேபோல் பாகுபலி புகழ் ராணா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற `நேனு ராஜா நேனு மந்திரி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் பங்கேற்றுள்ளார். இதேபோல் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக் பாஸ் சீசன் ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார். நம்ம ஊர் நடிகர் மயில்சாமி, கரு.பழனியப்பன் போல் கத்தி மகேஷும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் 'காலா' படத்தில் ராவணன் தொடர்பாக இடம்பெற்ற கருத்துகள் குறித்து நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற அவர், இந்துக் கடவுள்களான ராமர், சீதைக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து சில இந்து அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதுடன் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். 

சிலர் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரையடுத்து அவர் மீது 13 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரம் தெலங்கானாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், திடீரெனெ நேற்று முன்தினம் இரவு கத்தி மகேஷை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஜி.பி மஹேந்தர் ரெட்டி, ``ராமரைப் பற்றி கத்தி மகேஷ் தெரிவித்த கருத்து இந்துக்கள் மனம் புண்படும் வகையில் இருந்தது. மகேஷ் கடந்த ஒரு ஆண்டாக பலரை விமர்சித்து வருகிறார். இதனால்தான் தெலங்கானா மாநில சமூக விரோத அபாய நடவடிக்கை சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. மேலும், இந்துக்கள் மனம் புண்படும்படி பேசிய குற்றத்துக்காக சுமார் 6 மாதம் ஹைதராபாத் நகருக்குள் நுழைய மகேஷுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார். பின்னர் கத்தி மகேஷை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அவரது சொந்த ஊரான சித்தூரில் போலீஸ் இறக்கிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!