நிஜ ‘டங்கல்’ குடும்பத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தென்கொரிய அதிபர் மனைவி

`டங்கல்' படத்தின் நிஜ குடும்பமான போகத் குடும்பத்தை தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார், இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபரின் மனைவி. 

டங்கள்

தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் முதல்முறையாக  நான்கு நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜூலை 8-ம் தேதி இந்தியா வந்த அதிபருடன் அவரது மனைவி கிம் ஜங் சூக் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் பலரும் வந்துள்ளனர். தென்கொரிய அதிபர், தற்போது இந்தியாவில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார்.

 அதன் ஒரு பகுதியாக, அதிபருக்கு ‘டங்கல்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டது. அந்தத் திரைப்படம் தென்கொரிய அதிபரின் மனைவியை மிகவும் கவர்ந்ததால், அந்தப் படத்தின் நிஜ குடும்பமான ஹரியானாவில் உள்ள போகத் குடும்பத்தை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுக்காக டெல்லியில் தேநீர் விருந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என தென்கொரியத் தூதரகம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  '' அதிபர் மனைவியின் அழைப்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரின் சந்திப்பை எதிர்நோக்கி தன் குடும்பம் மிகவும் ஆவலாக உள்ளது'' என  நிஜ கதாநாயகரான மகாவீர் சிங் பதிலளித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள மல்யுத்த குடும்பமான போகத் குடும்பத்தை மையமாகவைத்து, கடந்த  2016-ம் ஆண்டு, அமீர் கான் நடிப்பில் வெளியான படம், `டங்கல்'. இந்தப் படத்தில், போகத் குடும்பத்தின் நிஜ கதை அப்படியே கூறப்பட்டிருந்தது. ஒரு தந்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தன் மகள்களை மல்யுத்தப் போட்டிக்கு எப்படி தயார்செய்கிறார். அதன்பின், அந்தப் பெண்கள் பெற்ற வெற்றி  குறித்து இந்தப் படம் பேசியிருக்கும். `டங்கல்' படம்,  மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளிக்குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. அத்துடன், இந்திய சினிமாவின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!