வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (10/07/2018)

கடைசி தொடர்பு:15:40 (10/07/2018)

தொடங்கப்படாத ஜியோ நிறுவனத்துக்கு சிறப்பு அந்தஸ்து! - அடுத்தடுத்த சர்ச்சையில் மத்திய அரசு

நாட்டில் உள்ள மூன்று தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மூன்று மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களை சிறந்த கல்வி நிறுவனங்களாகத் தேர்வுசெய்துள்ளது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இந்தப் பட்டியலில், தொடங்கப்படாத ஜியோ கல்வி நிறுவனம் இடம் பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஜியோ - பிரகாஷ் ஜவடேகர்

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், சமீபத்தில் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேர்வுசெய்து, அவற்றுக்கு Institutions of Eminence என சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதில், ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, இந்திய அறிவியல் கழகம் (IISc), பிட்ஸ் பிலானி, மணிப்பால் பல்கலைக்கழகம், ஜியோ கல்வி நிறுவனம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் அடிப்படை காரணிகளை மதிப்பீடுசெய்து, சிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன. 

ஜியோ

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன் ட்விட்டர் பக்கத்தில், `நம் நாட்டில் 800 கல்வி நிறுவனங்கள் இருந்தும் உலகத் தர வரிசையில் முதல் 100 - 200 இடங்களில் ஒரு கல்வி நிறுவனங்கள்கூட இடம் பிடிக்கவில்லை. அதனால், கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த முதற்கட்ட நடவடிக்கையாக, நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மற்ற கல்வி நிறுவனங்களும் தரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கும். ஐஐடி-களில் 14 சதவிகித மாணவிகள் பயின்று வருகின்றனர். இது, கடந்த இரண்டு ஆண்டுகளைவிட  எட்டு சதவிகிதம் அதிகம்' எனப் பதிவிட்டு, சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களின் படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஜியோ கல்வி நிறுவனமும் இடம் பிடித்துள்ளது. ஜியோ கல்வி நிறுவனம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், அந்த நிறுவனத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியிருப்பது தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், `முகேஷ் அம்பானிக்கு சாதகமாக பா.ஜ.க அரசு செயல்பட்டுவருகிறது' என்று விமர்சித்துவருகின்றன.