சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் குழுவுடன் கேரள உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு?

கேரளாவில், சர்ச்சைக்குரிய விதத்தில் மதுபோதைக்கு ஆதரவு அளித்துவந்த ஃபேஸ்புக் குழுவில், உயர் அதிகாரிகள் சிலரும் இடம்பெற்று இருந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அந்தக் குழுவை கலைக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஃபேஸ்புக் குழு

கேரளாவில், மதுபோதைக்கு ஆதரவாகவும், அரசின் மதுக் கொள்கைக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த ’கிளாஸிலே நுரையும் பிளேட்டிலே கறியும்’ என்ற முகநூல் குழுமீது, கேரள கலால் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கலால் சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மது நிறுவனங்கள், மதுபானக் கூடங்களில் பணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட பிராண்ட் மற்றும் மதுக் கடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் இந்த ரகசியக் குழு செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இந்தக் குழுவின் அட்மின்களாகச் செயல்பட்ட திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார், வினிதா தம்பதி, தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். இதனிடையே, இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த 36 மாடரேட்டர்களில் 10 பேர் விலகிவிட்டனர். எஞ்சியவர்கள்குறித்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அவர்களில், அநேகம் பேர் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் மலையாளிகளாக இருக்கக்கூடும் என கலால் துறையினர் சந்தேகிக்கின்றனர். 

இதனிடையே, சர்ச்சைக்குரிய இந்தக் குழுவில் கேரள அரசில் பணியாற்றும் சில உயரதிகாரிகளும் இடம்பெற்றிருந்ததாக போலீஸாரும் கலால் துறையினரும் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து சைபர் கிரைம் உதவியுடன் அடுத்த இரு தினங்களில் முக்கியத் தகவலைக் கண்டுபிடித்துவிட முடியும் என அதிகாரிகள் நம்புகிறார்கள். கடந்த மே மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தக் குழுவில், தொடக்கத்தில் 8 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். பின்னர் 60 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தது எப்படி? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

இந்த ரகசியக் குழுவில், உறுப்பினரின் உதவி இல்லாமல் சேர முடியாது. இந்த நிலையில், அதிகமான உறுப்பினர்கள் சேர்ந்தது எப்படி என்பதுவும் குழுவைத் தொடங்கிய அட்மின்கள் பிடிபட்டால் மட்டுமே தெரியவரும். அதனால், அட்மின் தம்பதியைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

இதனிடையே, இந்தக் குழுவை முடக்கும் பணிகளைக் கலால் துறை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய கேரள கலால்துறையின் கமிஷனரான ரிஷிராஜ் சிங், ’’இந்தக் குழுவை முடக்குமாறு ஃபேஸ்புக் நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் இந்தக் குழுகுறித்த முழு உண்மையை சைபர் கிரைம் உதவியுடன் கண்டுபிடிப்போம்’’ எனத் தெரிவித்தார். முகநூல் குழுவில் சர்ச்சைக்குரிய 57 படங்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளதாகவும் கலால்துறை அறிவித்துள்ளது. விரைவில் இந்தக் குழு முடக்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!