வெளியிடப்பட்ட நேரம்: 04:04 (11/07/2018)

கடைசி தொடர்பு:07:49 (11/07/2018)

கட்டணம் செலுத்தாத சிறுமிகளை அறையில் பூட்டி வைத்த பள்ளி நிர்வாகம்!

மாலை பள்ளி முடிந்ததும் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வகுப்பறையில் தங்கள் குழந்தைகள் இல்லாததைக் கண்டு, ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர்.

பள்ளிக்கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை, வகுப்பறையில் போட்டு 5 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்த தனியார் பள்ளி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் இயங்கி வரும் ஒரு பெண்கள் பள்ளியில், பிரைமரி வகுப்பைச் சேர்ந்த 16 பெண் குழந்தைகளை, கட்டணம் செலுத்தாத காரணத்துக்காக பள்ளி நிர்வாகம் அடைத்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இது கடந்த திங்கட்கிழமை (09-07-2018) நடந்துள்ளது. 

டெல்லி பள்ளி - மாணவர்களை அறையில் பூட்டிய சோகம்

மாலை பள்ளி முடிந்ததும் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வகுப்பறையில் தங்கள் குழந்தைகள் இல்லாததைக் கண்டு, ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர். கட்டணம் கட்டாததால் அடித்தளத்தில் இருக்கும் அறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் சொல்லியிருக்கின்றனர். காற்றுக்குக்கூட வழியில்லாத அந்த அறையில் வியர்த்து, அழுதபடி குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அடைக்கப்பட்டிருந்த பெரும்பாலான குழந்தைகள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். ஆனால், அதற்கான ரசீதை அவர்கள் ஆசிரியர்களுக்குக் காட்டாததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டதாக பெற்றோர்களிடம் சொன்னது பள்ளி நிர்வாகம். 

எதுவாக இருந்தாலும், தங்கள் குழந்தைகள் இப்படி அடைக்கப்பட்டிருந்ததைத் தாங்காத பல பெற்றோர்கள் சாந்தினி சவுக் காவல் நிலையத்துக்குப் போன் செய்து புகார் தெரிவித்தனர். டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு இயக்கம் (Delhi Commission for Protection of ChildRights) இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு கமிஷனை நியமித்துள்ளது. அவர்கள் இன்று (11-07-2018) பள்ளிக்கூடத்துக்குச் சென்று விசாரணை நடத்த உள்ளனர். 

பெற்றோர்களின் புகார்களைத் தொடர்ந்து ஐ.பி.சி செக்‌ஷன் 342 மற்றும் சிறுவர் நீதி சட்டம் (Juvenile Justice Act) 2015யின் செக்‌ஷன் 75 ஆகிய பிரிவுகளில் சாந்தினி சவுக் பகுதியிலிருக்கும் ஹாவுஸ் காஸி (Hauz Qazi) காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க