வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:10:00 (11/07/2018)

விவசாயிகளுக்கு 'நோ'... கோத்ரெஜுக்கு 'யெஸ்'! மும்பை புல்லட் ரயில் திட்ட சர்ச்சை

மக்களின் கேள்விகளுக்கு செவி சாய்க்காத அரசு தற்போது கோத்ரேஜ் நிறுவனத்தின் பரிசீலனையை ஏற்றுக்கொண்டிருப்பது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு 'நோ'... கோத்ரெஜுக்கு 'யெஸ்'! மும்பை புல்லட் ரயில் திட்ட சர்ச்சை

மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரை 508.17 கி.மீ தொலைவிலான புல்லட் ரயில் திட்டம் ஜப்பான் நாட்டு முதலீட்டுடன் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜப்பானிய  பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டத்துக்கு குஜராத்திலிருந்து இதுவரை 4 விவசாயிகள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் நாசிக் தொடங்கி மும்பை வரை சுமார் 160 கி.மீ தூரம் நடைப் பேரணி மேற்கொண்டனர் விவசாயிகள். தங்களது நிலங்களின் மீதான கடன் தள்ளுபடி கடும் வறட்சியில் உழலும் அந்த விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக இருந்தது. நிலத்தின் மீதான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்ன அதே அரசுதான் இந்த புல்லட் ரயில் திட்டத்துக்காக சுமார் 62% நிலத்தை தற்போது அபகரிக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிர விவசாயிகளிடையே இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

இந்த நிலையில்தான் தனியார் நிறுவனமான கோத்ரேஜுக்குச் சொந்தமான தொழில்நிலங்கள் 10 ஏக்கரை புல்லட் ரயில் திட்டத்துக்காக எடுத்துக்கொள்ள மகாராஷ்டிர மாநில அரசு திட்டமிட்டது. ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை கைவசப்படுத்திக்கொள்ள இந்த வருடத் தொடக்கத்தில் கோத்ரேஜ் நிறுவனம் இருக்கும் விர்கோலி மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து தற்போது நில அபகரிப்பை எதிர்த்து அந்த நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

அதில், ``அந்த நிலத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அந்தப் பகுதியில் ரயில் பாதையை மாற்றி அமைக்கவும். அதற்காக கோத்ரேஜ் நிறுவனம் வேறு ஒரு பகுதியில் நிலத்தைத் தரத் தயாராக இருக்கிறது’ என்றும் கூறப்பட்டிருந்தது. கோத்ரேஜ் நிறுவனத்தின் இந்த ஆலோசனையை பரிசீலனை செய்வதாகவும் மகாராஷ்டிரா அரசு கூறியிருக்கிறது. ஆனாலும் விவசாயிகளிடையேயான எதிர்ப்பு இன்னும் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. மேலும், இந்தத் திட்டத்துக்காக விவசாய மற்றும் பழங்குடி மக்களின் நிலங்கள் ’நிலமீட்பு’ என்கிற பெயரில் அபகரிக்கப்பட்டுவருகின்றன. இதுவரை 62 சதவிகித நிலங்கள் இவ்வாறாக மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது

மும்பை விவசாயிகள் போராட்டம்

ஆனால், நில அபகரிப்பை எதிர்த்துவரும் குழுவினரோ, ``மும்பை மற்றும் அகமதாபாத் இடையில் இதுவரையில் விமானப் போக்குவரத்து இருக்கிறது. அதற்கான டிக்கெட் விலை ரூ.2,000/-  இந்த நிலையில் புல்லட் ரயிலில் மும்பையிலிருந்து, அகமதாபாத் பயணிப்பதற்கான செலவு ரூ.3,000/-. மக்கள் எதற்காக அதிக விலை கொடுத்து பயணிக்கப் போகிறார்கள்?. எதற்காக ஜப்பானிடமிருந்து கடன் பெற்று இவ்வளவு பெரிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். எதற்காக இவ்வளவு விவசாய நிலங்களை அபகரிக்க வேண்டும்?” என்று கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர். 

மக்களின் கேள்விகளுக்கு செவி சாய்க்காத அரசு தற்போது கோத்ரேஜ் நிறுவனத்தின் பரிசீலனையை ஏற்றுக்கொண்டிருப்பது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிகம் விவசாயத் தற்கொலைகளைச் சந்தித்த மாநிலங்களின் பட்டியலில் முதலில் இருப்பது மகாராஷ்டிரா. கடந்த 2017 வருடத் தொடக்கத்தில் மட்டுமே 1,129 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அங்கிருக்கும் விவசாயக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு விவசாயிகளை மேலும் அலட்சியப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்