ராகுல் காந்தி - பா.இரஞ்சித் சந்திப்பின் பின்னணி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் `காலா' படத்தின் இயக்குநர்  இரஞ்சித்தைச் சந்தித்துப் பேசினார். 

ரஞ்சித் ராகுல் சந்திப்பு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இயக்குநர் இரஞ்சித்தை சந்தித்ததாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்போது, மெட்ராஸ் கலையரசனும் உடன் இருந்தார். இந்த ட்விட்டர் பதிவில், ``நான் டெல்லியில் நேற்று மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் இரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்தேன். நாங்கள் அரசியல், சினிமா மற்றும் சமூகப் பிரச்னை குறித்துப் பேசினோம். இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. இது தொடரும் என நினைக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக  இரஞ்சித் தரப்பில் விசாரித்தபோது, ``திருமாவளவன்- ராகுல் சந்திப்புடன் இரஞ்சித்- ராகுல் காந்தி சந்திப்பு தொடர்புடையது கிடையாது. ராகுல்காந்தி `காலா' படத்தைப் பார்த்திருக்கிறார். முன்னரே ராகுல்காந்தி இரஞ்சித்தைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். பட வேலைகள் முடிவடைந்து இரஞ்சித் தற்போது வட இந்தியா சுற்றுலா சென்றபோது அவரைச் சந்தித்துள்ளார். `காலா' படம் ராகுலுக்குப் பிடித்திருந்தது. அதனாலே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், பட்டியல் இன மக்களின் மீதான ராகுலின் பார்வை காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களைப் போன்றது இல்லை என்பதால்  இரஞ்சித், ராகுலை சந்தித்துப் பேசியதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஜிங்னேஷ் மேவானி இதற்கு முன்னர் சென்னை வரும்போது இரஞ்சித்தைப் பார்த்தார். இந்தச் சந்திப்பு ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதது” என்று முடித்துக்கொண்டார்.

இதனிடையே, பேரறிவாளனை விடுவிக்க உதவ வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் இரஞ்சித் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று ராகுல்காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!