வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (11/07/2018)

கடைசி தொடர்பு:15:50 (11/07/2018)

ஜியோ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தது ஏன்? - மத்திய அரசு விளக்கம்

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஜியோ கல்வி நிறுவனத்துக்கு நிபந்தனை அடிப்படையில்தான் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மனிதவள மேம்பாடு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் கோபால்சாமி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மானியம் வழங்கும் நோக்கில், பல்வேறு பல்கலைக்கழகங்களை இக்குழு ஆய்வுசெய்தது. சமீபத்தில், தலைசிறந்த 6 நிறுவனங்களை (Institute of Eminence) இக்குழு தேர்வுசெய்தது. இந்த நிறுவனங்களுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.

மத்திய அமைச்சகம்

 

கோபால்சாமி தலைமையிலான குழு தேர்வுசெய்த பட்டியலில் இடம்பெற்றவை, ஐ.ஐ.டி மும்பை, ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.எஸ்.சி பெங்களூரு, மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, ஜியோ இன்ஸ்டியூட் ஆகிய 6 நிறுவனங்களாகும். இதில் ஜியோ இன்ஸ்டியூட் இன்னும் தொடங்கப்படவில்லை. தொடங்கப்படாத கல்வி நிறுவனத்துக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. வெறும் பேச்சளவில் மட்டுமேயிருக்கும் ஒரு நிறுவனத்தை தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் சேர்த்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலாளர் சுப்ரமணியன் பேசுகையில், `ஜியோ நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் சிறப்பு அந்தஸ்துகளைப் பெறும் வகையில் செயல்பட்டு, நிபுணர்குழுவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். தவறினால் அந்தஸ்தை திரும்பப் பெற நிபுணர் குழுவுக்கு அதிகாரம் உள்ளது' என்று விளக்கமளித்தார்.