வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:20 (11/07/2018)

டி.என்.பி.எல். போட்டிகளில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்கக் கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி

`தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க அனுமதியில்லை' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் 3-வது சீசன் போட்டிகள் திருநெல்வேலி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்தில் இன்று தொடங்குகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. உள்ளூர் வீரர்களின் திறனைக் கண்டறியும் இந்தத் தொடரின் 3-வது சீசன் இன்று திருநெல்வேலியில் உள்ள சங்கர்நகர் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக்

இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக 6.10 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``டி.என்.பி.எல் விளையாட்டுப் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், `தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதியில்லை' என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்தப் போட்டிகளில் முதல் ஆண்டில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், அடுத்த ஆண்டில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.