வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:40 (12/07/2018)

லதா ரஜினிகாந்த்தை சாடிய ராமதாஸ்!

`` `கோச்சடையான்' படத்துக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கை லதா ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்'' என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்


`கோச்சடையான்' படத்துக்காக லதா ரஜினிகாந்த்தின் மீடியா ஒன் நிறுவனம், ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் வாங்கியது. மொத்தக் கடன் தொகையில் ரூ.6.20 கோடியை திருப்பிச் செலுத்தாமல் லதா ரஜினிகாந்த் காலம் தாழ்த்துவதாக வழக்கு தொடரப்பட்டது. இதில், லதா ரஜினிகாந்த் தரப்பில் ரூ.80 லட்சம் பாக்கி மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பெங்களூரு நீதிமன்றத்தின் ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது.

இவ்விவகாரத்தில், பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் , `உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, வெட்கமில்லை, இங்கு யாருக்கும் வெட்கமில்லை. `கோச்சடையான்' படத்துக்காக லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த 2 முறை அவகாசம் அளித்தும் செலுத்தவில்லை. கடனை அடைப்பதாகக் கூறிவிட்டு, இப்போது மறுப்பதை ஏற்கமுடியாது. இதுகுறித்த வழக்கை லதா எதிர்கொண்டு ஆகவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.