வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (11/07/2018)

கடைசி தொடர்பு:12:23 (12/07/2018)

கூகுளில் தேடியும் கிடைக்காத ஜியோ இன்ஸ்டிட்யூட்... மத்திய அரசின் `அடடே’ விளக்கம்!

தொடங்கப்படாத ஒரு கல்வி நிறுவனத்தை மதிப்புமிகு நிறுவனங்களில் ஒன்றாகச் சேர்த்திருப்பது கல்வியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கூகுளில் தேடியும் கிடைக்காத ஜியோ இன்ஸ்டிட்யூட்... மத்திய அரசின் `அடடே’ விளக்கம்!

த்திய மனிதவளத்துறை அறிவிக்கப்பட்ட மதிப்புமிகுந்த ஆறு கல்வி நிறுவனங்களில், கூகுளில் தேடியும் கிடைக்காத ஜியோ இன்ஸ்டிட்யூட்டையும் சேர்த்து அறிவித்தது, கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விளக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs), பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc), ராஜஸ்தான் பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (BITS), கர்நாடகாவில் உள்ள மணிபால் உயர்கல்வி நிறுவனம், இன்னமும் ஆரம்பிக்கப்படாத ஜியோ இன்ஸ்டிட்யூட் நிறுவனம் என ஆறு கல்வி நிறுவனங்களையும் மதிப்புமிகு கல்வி நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது மனிதவளத்துறை" என்று அறிவித்தார். 

ஜியோ இன்ஸ்டிட்யூட்

ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையை (Reliance Foundation) நடத்திவருகிறார். இதில் ஓர் அங்கமாக ஜியோ இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தைத் தொடங்க, மத்திய அரசிடம் அனுமதிக்குமாறு விண்ணப்பித்துள்ளது. இந்த நிலையில், தொடங்கப்படாத ஒரு கல்வி நிறுவனத்தை மதிப்புமிகு நிறுவனங்களில் ஒன்றாகச் சேர்த்திருப்பது கல்வியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய அரசு அறிவித்துள்ள மதிப்புமிகு ஆறு கல்வி நிறுவனங்களில் மூன்று, மத்திய அரசின் பெரும்நிதி உதவியோடு செயல்பட்டுஜியோ கல்வி நிறுவனம்வருகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களில் பிர்லா கல்வி நிறுவனம் 1964-ம் ஆண்டும், மணிபால் உயர்கல்வி நிறுவனம் 1953-ம் ஆண்டும் தொடங்கப்பட்டவை. 

முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான நான்கு பேர்கொண்ட நிபுணர்கள், சிறந்த 20 கல்வி நிறுவனங்களை அலசி ஆராய்ந்து, ஆறு கல்வி நிறுவனங்கள் மட்டுமே தரமானவை என அறிவித்துள்ளனர்.

குழுவின் தலைவராக உள்ள கோபாலசுவாமி, ``அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், கடந்த நூறு ஆண்டுகளாகச் சிறந்த கல்வி நிறுவனங்களாக விளங்குகின்றன. அவை முதுமையான கல்வி நிறுவனங்கள். இந்தியக் கல்வி நிறுவனங்கள் மிகவும் இளைய கல்வி நிறுவனங்கள். இவை, இனிவரும் காலங்களில் சாதனை படைக்கும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், அடுத்த மூன்று ஆண்டுக்குள் கல்விப் பணியை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு ஆரம்பிக்காவிட்டால், மதிப்புமிகு கல்வி நிறுவனங்கள் என்று வழங்கப்பட்ட அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்" என்று அறிவித்திருக்கிறார். 

ஜியோ இன்ஸ்டிட்யூட் மதிப்புமிகு கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை, பலரும் ட்விட்டரில் வறுத்தெடுத்துவருகின்றனர். 

`ஜியோ இன்ஸ்டிட்யூட்டின் கட்டடம் எங்கே, அந்தக் கல்வி நிறுவனத்தின் இணையதளமாவது உண்டா?, அங்கு ஏதாவது ஒரு மாணவராவதுஜியோ கல்வி நிறுவனம் பட்டம் பெற்றிருக்கிறாரா?' என்று பலரும் ட்விட்டரில் கேள்விக்கணைகள் தொடுக்க, அந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு விளக்கமளித்திருக்கிறது மனிதவளத்துறை.

இந்தத் துறையின் செயலாளர் சுப்ரமணியம், ``மதிப்புமிகு கல்வி நிறுவனம் தொடர்பாக ஆய்வுசெய்தபோது ஜியோ இன்ஸ்டிட்யூட் புதிதாகத் தொடங்க அனுமதி கேட்டிருக்கிறது. புதிதாக அனுமதி கேட்ட கல்வி நிறுவனங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டே பட்டியல் தயாரிக்கப்பட்டது. 11 தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த வரிசையில் இடம்பெற்றன. இதில் இடவசதி, தர நிர்ணயம், அனுபவம் வாய்ந்த குழு, நிதி ஒதுக்கீடு, செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில்தான் ஜியோ நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். 

ஜியோ அடுத்த மூன்று ஆண்டுக்குள் குறிப்பிடப்பட்ட அனைத்து விஷயங்களையும் பூர்த்திசெய்தால், மதிப்புமிகு கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்படும். அப்படிச் செய்யாவிட்டால் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். சர்வதேச அளவில் தரத்தை உயர்த்த, தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் கல்வித் துறையில் முதலீடு செய்ய வேண்டும். அதை வரவேற்கவேண்டியது அவசியம். மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே 1,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

மதிப்புமிகு கல்வி நிறுவனங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை, அகில இந்தியப் பொறியியல் தொழில்நுட்ப அமைப்பு, பல்கலைக்கழக மானியக்குழு அல்லது புதியதாக அமைக்கப்படவுள்ள உயர்கல்வி ஆணையம் போன்றவை கட்டுப்படுத்தாது. 

ஜியோ கல்வி நிறுவனம்இந்தப் பல்கலைக்கழகங்கள், 30 சதவிகித வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும், இவர்களுக்கான கட்டணத்தைக் கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் சிறந்த 500 பல்கலைக்கழகங்களிலிருந்து 25 சதவிகிதப் பேராசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம். இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. எந்தவிதமான அனுமதி பெறாமல், புதிய கல்விப் பாடத்திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். 

தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்த நிறுவனங்களின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என அறிவித்திருந்தது மனிதவளத்துறை. ஆனால், தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்த பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்கு அடுத்து, இரண்டாவது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி-யைத் தவிர்த்து, மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்துள்ள மும்பை மற்றும் டெல்லி ஐ.ஐ.டி-க்களைத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர் கல்வியாளர்கள்.

இதேபோல, தனியார் கல்வி நிறுவனங்களில் 18-வது இடம் பிடித்த மணிபால் கல்வி நிறுவனத்தையும், 26-வது இடம் பிடித்த பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், 22-ம் இடத்தைப் பிடித்துள்ள வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை.


டிரெண்டிங் @ விகடன்