`தாய்லாந்து சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்' - குவியும் பாராட்டுகள்!

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்பதற்கு இந்திய நிறுவனம் உதவியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 

கிரிலோஸ்கர் நிறுவனம்

நீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு தாய்லாந்து குகைகுக்குள் சிக்கியிருந்த 16 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் தாய்லாந்து மக்களைப்போல், ஒட்டுமொத்த உலகமும் நிம்மதியடைந்துள்ளது. மீட்கப்பட்ட சிறுவர்களுக்கும் பயிற்சியாளருக்கும் சிகிசிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதால் தாய்லாந்து அரசு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இதற்கிடையே, சிறுவர்கள் மீட்கப்பட்ட செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. பல்வேறு தொழில்நுட்ப உதவிகளுடன் சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் குகைக்குள் இருந்த நீரை வெளியேற்றுவதற்கான தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது `கிரிலோஸ்கர் பிரதர்ஸ் லிமிட்' நிறுவனம். இது அதிநவீன தொழில்நுட்பம் மூலம் தண்ணீரை வேகமாக வெளியேற்றும் மோட்டார்கள், தண்ணீரை வேகமாக இறைக்கும் மோட்டார்களைத் தயாரிப்பதில் இந்திய அளவில் முன்னணி நிறுவனம் ஆகும். குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்பதற்காகத் தாய்லாந்து அரசு, பல்வேறு நாடுகளின் உதவிகளைக் கோரியது. அதன்படி, தாய்லாந்து மீட்புப் படையினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,000 மீட்புப் படையினர் பங்கேற்றனர். 

இதேபோல் இந்திய தரப்பிலும் உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய அரசு மூலம் குகையில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு `கிரிலோஸ்கர் பிரதர்ஸ் லிமிட்' நிறுவனத்தின் உதவி நாடப்பட்டது. வேண்டுகோளை ஏற்று கிரிலோஸ்கர் நிறுவனமும் தனது தொழில்நுட்ப வல்லுநர்களைத் தாய்லாந்துக்கு அனுப்பியது. அவர்கள் அங்கு சென்று ஆய்வு நடத்தியதுடன் குகையின் ஏற்ற, தாழ்வுகளுக்கு ஏற்ப நீரை உறிஞ்சும் மோட்டரை அமைப்பதற்குத் தேவையான வழிமுறைகளை எடுத்துரைத்தனர். அவர்கள் வழிகாட்டுதலின்படி, குகையிலிருந்து நீரை வெளியேற்றுவதற்கான குழாய்கள் அமைக்கப்பட்டன. இதன் பின்னர்தான் தண்ணீர் வேகமாக வெளியேற்றப்பட்டது. மேலும், சேறும் சகதியுமாக இருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் வழிகாட்டுதல் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. இதன் பின்னரே குகையிலிருந்து சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதை இந்த நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பலரும் நிறுவனத்தைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!