வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:22 (12/07/2018)

`கரணம் தப்பினால் மரணம்’ - உயிரைப் பணயம் வைக்கும் மாணவர்கள்! - அதிர்ச்சி வீடியோ

குஜராத்தில், கால்வாயைக் கடக்க உதவியாக இருந்த பாலம் உடைந்ததால், பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் கால்வாயைக் கடந்துவருகின்றனர். 

மாணவர்கள்

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ளது நைகா, பேராய் கிராமங்கள். இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையே கால்வாய் ஒன்று இருக்கிறது. இந்தக் கால்வாயைக் கடந்துதான் பொதுமக்கள் வெளியூர்களுக்குச் செல்ல முடியும். அப்படி இருக்கையில், கால்வாயைக் கடக்க பாலம் ஒன்று இருந்தது. இந்தப் பாலம் இல்லையென்றால், சுமார் 10 கி.மீ சுற்றித்தான் செல்ல முடியும். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தப் பாலம் உடைந்துவிட்டது. இதனால், இரண்டு கிராம மக்களும் அவதிக்குள்ளாகினர். மேலும், பாலத்தைச் சீரமைக்க அரசாங்கம் மெத்தனம் காட்டவே, தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், கரணம் தப்பினால் மரணம் என்ற அபாயகரமான வகையில் கால்வாயின் இடையே உள்ள தடுப்பணைகளின் ஷட்டர்மீது ஏறி பள்ளிக்குச் செல்கின்றனர். 

உயரம் குறைவாக உள்ள மாணவர்களுக்குப் பெரியவர்கள் தடுப்பணையைக் கடக்க உதவுகின்றனர். இதை, அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இது, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதுடன், மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. விரைவாகப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, மழை பெய்துவருவதால் பாலம் அமைக்கும் பணியைத் தொடங்க முடியவில்லை என கேடா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க