வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:20 (12/07/2018)

TCS நிறுவனப் பங்கின் உயர்வால் பாசிட்டிவாக முடிந்தது சந்தை - 11-07-2018

சீன நாட்டு இறக்குமதிகள் மீதான வரி விதிப்பைக் கடந்த வாரம் அமல்படுத்திய அமெரிக்கா, மேலும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சீனப் பொருள்கள்மீது விதிக்கப்போவதாக அறிவித்திருப்பதையடுத்து, உலகச் சந்தைகளில் மீண்டும் வர்த்தக யுத்தம் பற்றிய கவலை அதிகமாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்திய பங்குச் சந்தையில் இன்று முதலீட்டாளர்கள் ஒரு குழப்பமான நிலையிலேயே வர்த்தகத்தில் ஈடுபட்டனர். பங்குகள் ஒரு திக்குத்தெரியாத நிலையில் மேலும் கீழுமாகத் தடுமாறின என்று கூறலாம்.

இருந்தும், வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ்  26.31 புள்ளிகள். அதாவது 0.07 சதவிகித லாபத்துடன் 36,265.93 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.05 புள்ளிகள் உயர்ந்து 10,948.30 என முடிவுற்றது.

சந்தை, இன்று ஓரளவுக்கு பாசிட்டிவாக முடிந்ததற்கு முக்கியக் காரணம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டதுதான். அந்நிறுவனத்தின் நடப்பாண்டில், முதல் காலாண்டுக்கான செயல்பாடு சிறப்பாக அமைந்ததனால், முதலீட்டாளர்கள் அப்பங்கை வாங்குவதற்கு பெரிதும் ஆர்வம் காட்டினர். நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம், கடந்த ஆண்டின் கடைசி காலாண்டுக்கான லாபத்தைவிட 6.3 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக TCS நேற்று மாலை அறிவித்திருந்தது.

ஆசிய சந்தைகள் பெரும்பாலும் சரிவைச் சந்தித்தன. அமெரிக்காவின், மேலும் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்களின் மீதான வரி விதிப்பு அறிவிப்பை அடுத்து, சீனாவும் தன் பங்கிற்கு இதுகுறிதந்து நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியிருப்பது, வர்த்தகப் பூசல் பெரிதாகும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐரோப்பியச் சந்தைகளும் இன்று இறங்குமுகமாக இருக்கின்றன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  4.9%
கோட்ரேஜ் கன்சூமெர் புரொடக்ட்ஸ் 5.6%
பார்தி இன்ஃப்ராடெல் 3.6%
பஜாஜ் ஆட்டோ 2.4%
அதானி பவர் 17.6%
ஷில்பா மெடிகேர் 10.4%
ஐ.டி.பி.ஐ. பேங்க் 7.1%
இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் 5.6%


விலை சரிந்த பங்குகள் :

கோல் இந்தியா 4.6%
வேதாந்தா 3.5%
டாடா மோட்டார்ஸ் 2.7%
டாடா ஸ்டீல் 2.2%
ஸ்டேட் பேங்க் 1.7%
பார்தி ஏர்டெல் 1.6%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 1.6%
ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் 5.5%
ITDC 5.3%

இன்று, மும்பை பங்குச் சந்தையில் 1064 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1557 பங்குகள் விலை சரிந்தும், 156  பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.