பிரேதப் பரிசோதனையையும் விட்டுவைக்காத '11' - டெல்லி கூட்டு மரணத்தில் விலகாத மர்மம்

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் மர்மம் நீடிக்கிறது. 

டெல்லி குடும்பம்

Photo Credits : Punjab Kesari

டெல்லி புராரி பகுதியில் பட்டியாலா என்ற குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த ஜூலை 1-ம் தேதியன்று மொத்தமாகத் தற்கொலை செய்துகொண்டனர். முதலில் இவர்களின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. பின்னர், அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் அவர்கள் மூடநம்பிக்கையினால் இறந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் வீட்டில் கிடைத்த டைரி மற்றும் சில மர்மமான விசயங்கள் போலீஸாரை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்தத் தற்கொலை நீண்ட காலமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். ஆனால், தற்கொலைக்கான தெளிவான நோக்கம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், இறந்த 11 பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10 பேர் தூக்கில் தொங்கிதான் தற்கொலை செய்துகொண்டனர் என உறுதியாகியுள்ளது. ஆனால், அந்த வீட்டில் மிகவும் முதியவரான நாராயணி தேவியின் மரணம்  மட்டும் எப்படி நிகழ்ந்தது என்பது மருத்துவர்களுக்கே இன்னும் குழப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அந்த வீட்டுக்கு மருத்துவர்கள் குழு சென்று தடயங்களைச் சேகரிக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

தற்போது இந்தக் குடும்பத்தின் கூட்டு மரணத்தின் பின்னணியில் 11 என்ற எண்ணின் பங்கு குறித்து தீவிர விவாதம் கிளம்பியுள்ளது. ஏனெனில், பட்டியாலா குடும்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11, அவர்களின் வீட்டில் சந்தேகிக்க கூடியதாகப் பொருத்தப்பட்டிருந்த குழாய்களின் எண்ணிக்கை 11, பட்டியாலா குடும்பத் தலைவர் 11 வருடங்களாக டைரி எழுதி வந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. இறுதியாகப் பட்டியாலா குடும்பத்தினர் இறந்து சரியாக 11 நாள்களுக்குப் பிறகு, அவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. இதிலிருந்து 11 என்ற எண்ணின் மர்மமும் இந்தக் குடும்பம் இறந்ததற்கான மர்மமும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!