ஆந்திராவில் ‘அண்ணா கேன்டீன்’ - 5 ரூபாய்க்கு சாப்பாடு!

தமிழகத்தில் 'அம்மா உணவகம்' இருப்பது போன்று ஆந்திராவில், 'அண்ணா கேன்டீனை' அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார்.

அண்ணா கேன்டீன்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, `அம்மா உணவகம்' என்ற திட்டத்தை மாநிலம் முழுவதும் கொண்டுவந்தார். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறைந்த விலையில் உணவு வழங்குவதே இதன் நோக்கம். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளில் அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இட்லி ஒரு ரூபாய்க்கும், மதிய உணவு  5 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதலே, பல மாநில முதல்வர்கள் இதுகுறித்து ஆய்வுசெய்தனர். இத்திட்டம், கூலி வேலை செய்பவர்கள், பள்ளி மாணவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களுக்கும் பெரிதும் உதவிவருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் செயல்பட்டுவரும் அம்மா உணவகத்தைப் போன்று ஆந்திராவில், அண்ணா கேன்டீனை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், அண்ணா கேன்டீன் ஆந்திர மாநிலத்தில் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். வாக்குறுதியின்படி, தற்போது அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இட்லி, பூரி,பொங்கல், உப்புமா, சாப்பாடு ஆகியவை 5 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகமானது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ( காலை 7-10.30, மதியம் 12.30 - 03.00, இரவு 7.30- 09.00) செயல்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!