வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:13 (12/07/2018)

கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படலாம்... கேரள மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கன மழை

கேரள மாநிலத்தில், வரும் 17-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. கேரளா- லட்சத்தீவு கரையோரம் வடமேற்குத் திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், இந்த காலகட்டத்தில் 20 செமீ., வரை மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புறம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் மழை காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு, மலையோரப் பகுதிகளில் மண் சரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும் என்தால், மலையோப்ர பகுதி மக்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வயநாடு, பாலக்காடு, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களிலும் ஆலப்புழா மாவட்டத்தில் மூன்று தாலுகாக்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.