`தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியவில்லையா, இடித்துத் தள்ளுங்கள்!’ - உச்ச நீதிமன்றம் காட்டம்

தாஜ்மகாலைப் பராமரிக்க முடியவில்லை என்றால் மூடிவிடுங்கள், இல்லையென்றால் இடித்துத்தள்ளுங்கள் என உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

தாஜ்மஹால்

காதலின் நினைவுச் சின்னமான தாஜ்மகாலைக் காண உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். ஆனால், கடந்த சில வருடங்களாக தாஜ்மகால் தனது பொலிவை இழந்து வருவதாகவும் அதைப் பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். வெள்ளை நிறத்தில் இருந்து தற்போது பழுப்பு நிறத்தில் காட்சியளிப்பதாகப் புகார் தெரிவித்தனர். இதைப் சுற்றியுள்ள பகுதியில் தொழிற்சாலைகள் அதிகரித்துவிட்டதால் அதிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுவதாகவும் இதனால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், தாஜ்மகால், ஈஃபிள் கோபுரத்தைவிட அழகானது. இதைக் காண ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் வருகை புரிகின்றனர். மத்திய அரசும் அந்நிய செலவாணியை ஈட்டுகிறது. ஈஃபிள் கோபுரத்தை 80 மில்லியன் மக்கள் பார்வையிடுகின்றனர். இது தாஜ்மகாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகம். அவர்களால் அதைப் பராமரிக்க முடிகிறது; நம்மால் முடியவில்லை. 

இதே நிலை நீடித்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிடும். உங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் அதை மூடி விடுங்கள் அல்லது இடித்துவிடுங்கள். உங்கள் அக்கறையின்மை காரணமாக நாட்டுக்கு ஏற்படும் பெரிய இழப்பை நீங்கள் உணரவில்லையா? தாஜ்மகாலைப் பாதுகாப்பதா அல்லது இடிப்பதா என்பதை இந்திய அரசாங்கம் முடிவு செய்துகொள்ளட்டும். தாஜ்மகால் விவகாரத்தில் மத்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் உரிய அக்கறையின்றி செயல்படுகிறது. தாஜ்மகாலைப் பாதுகாப்பதற்கான திட்டத்தையும் உத்தரப்பிரதேச அரசு வகுக்கவில்லை. இதன் காரணமாக அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது" என நீதிபதிகள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!