வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:49 (12/07/2018)

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவனின் உடல் ஹைதராபாத் வந்தடைந்தது!

மாணவர் உடல்

Pic courtesy : ANI

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சரத் கொப்பு என்ற மாணவர் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றார். மென்பொருள் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர், மேற்படிப்புக்காக அமெரிக்காவின் மிஸ்ஸோரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். படித்துக்கொண்டே அங்குள்ள உணவகம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வந்திருக்கிறார்.

கடந்த 6-ம் தேதி அந்த உணவகத்தில் நுழைந்த நபர்கள் அங்கிருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். அப்போது நடந்த களேபரத்தில் அந்த மர்ம நபர்கள் சரத்தை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியிருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து, சரத் கொப்புவை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சரத் கொப்புவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று இரவு அவரது உடல் ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா விமான நிலையம் சென்று அஞ்சலி செலுத்தினார். மாணவரின் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.