அடுத்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்றால்..? - சசி தரூர் சர்ச்சை பேச்சு

பா.ஜ.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறிவிடும் என்று காங்கிரஸைச் சேர்ந்த சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். இவரின், பேச்சுக்கு பொறுப்பேற்று `ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று பா.ஜ.க கூறியுள்ளது.

சசி தரூர்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், `வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால், புதிய அரசியலமைப்பை எழுதி உருவாக்குவார்கள். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மௌலானா ஆசாத் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் எதற்காகப் போராடினார்களோ அது முற்றிலும் இல்லாமல் போய்விடும். இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்" என்று பேசினார். இவரின், இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா, `சசி தரூரின் இந்தக் கருத்துக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். பாகிஸ்தான் என்ற நாடு உருவானதற்கு காங்கிரஸின் பங்கு உள்ளது.' என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!