வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:39 (12/07/2018)

டெல்லியில் தீராத துணை நிலை ஆளுநர் பிரச்னை - ராஜ்நாத்தைச் சந்தித்த கெஜ்ரிவால்!

டெல்லி துணை நிலை ஆளுநர் அதிகார வரம்பு தொடர்பான உச்சநீதிமன்ற நகலுடன் ராஜ்நாத் சிங்கை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.

 

கெஜ்ரிவால்

டெல்லி துணை நிலை ஆளுநர், மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக யாருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடுத்தார். அந்த வழக்குக்கு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல்  மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாறுதல் செய்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டார். இதனால் மீண்டும் இருவருக்குமிடையே பனிப்போர் வெடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமைச் செயலாளர் மூலம் துணை நிலை ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் `உச்சநீதிமன்ற தீர்ப்பை நன்றாகப் படித்துப்பாருங்கள், அதில் யாருக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரியும்' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதை அனில் பைஜால் கண்டுகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து துணை நிலை ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை ராஜ்நாத் சிங்குக்குப் படித்துக் காட்டி, துணை நிலை ஆளுநரை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தினார். சந்திப்பின் முடிவில் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.