`3 ஆண்டு வேட்டையில் 21 பேரைக் கொன்றது!'- கடைசியில் சிறுத்தைக்கு நடந்த துயரம் | forest officials of Rajaji Tiger Reserve has shot Leopard

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:36 (12/07/2018)

`3 ஆண்டு வேட்டையில் 21 பேரைக் கொன்றது!'- கடைசியில் சிறுத்தைக்கு நடந்த துயரம்

21 பேரைக் கொன்ற சிறுத்தையை சுட்டுக் கொன்றனர், உத்தரகாண்ட் வனத்துறையினர். `இதை உயிருடன் பிடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து சிறுத்தையை சுட்டுக் கொல்ல முடிவு செய்தோம்' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

சிறுத்தை

Photo Credit- ANI

உத்தரகாண்ட் மாநிலம் மோதிச்சூர் வனப்பகுதியில் உள்ள சுற்றுவட்டாரக் கிராமங்களில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த சிறுத்தையை சுட்டுக் கொன்றுள்ளனர் வனத்துறையினர். வன அதிகாரி உட்பட 21 பேரை கடந்த மூன்று ஆண்டுகளாக வேட்டையாடி ருசி பார்த்து வந்தது சிறுத்தை. மேலும், உயிருடன் விட்டால் பலபேரின் உயிரைக் குடித்துவிடும் என்ற அச்சத்தில் சிறுத்தையைப் பிடிக்கும் பணியை சமீபத்தில் தீவிரப்படுத்தினர் வனத்துறை அதிகாரிகள். இந்நிலையில், மோதிச்சூர் வனப்பகுதியில் உள்ள ராஜாஜி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10-ம் தேதி இரவில், சிறுத்தையை சுட்டுக் கொன்றனர் வனத்துறையினர். உயிரிழந்த சிறுத்தையின் உடலைக் கைப்பற்றிய அதிகாரிகள் அதைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். 

சிறுத்தை

Photo Credit- ANI

இதுகுறித்து ராஜாஜி தேசிய பூங்கா இயக்குநர் சனாதன சோனகர் கூறுகையில், `கடந்த 2014-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்' என்றார்.