சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை!

ந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று காலை 36,478 என்ற புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதேபோன்று நிஃப்டியும் 11,012 புள்ளிகளை எட்டி புதிய உச்சம் தொட்டது.

சென்செக்ஸ்

இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோதே 30 பிஎஸ்இ சென்செக்ஸ் பங்குகளில் 26 பங்குகளுக்கான தேவை அதிகம் காணப்பட்டது. குறிப்பாக ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க், எஸ்பிஐ, கோல் இந்தியா மற்றும் இண்டஸ்இண்ட் பேங்க் போன்ற பங்குகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதையடுத்து சென்செக்ஸ் கிடுகிடுவென உயர்ந்து 36,478.78 என்ற புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனைப் படைத்தது.

இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11,012.45 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இந்தியாவில் வர்த்தகம் ஆரம்பிப்பதற்கு முன்பே சிங்கப்பூரில் எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டி வர்த்தகம் 34.50 புள்ளிகள் உயர்வுடன் 10,982 ஆகக் காணப்பட்டது. இது இந்தியாவில் தேசியப் பங்குச் சந்தையில் சாதகமான போக்கை ஏற்படுத்தி நிஃப்டி புள்ளிகள் உயரக் காரணமாக அமைந்தது. தேசியப் பங்குச் சந்தையில் 44 பங்குகள் உயர்ந்து காணப்பட்ட நிலையில், 6 பங்குகள் மட்டுமே சரிவடைந்து காணப்பட்டன. குறிப்பாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பிபிசிஎல், ஐஓசி மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 4 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்து காணப்பட்டன.


இரண்டு பங்குச்சந்தைகளும் இதற்கு முன் இல்லாத அளவில் புதிய அதிகபட்ச புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது முதலீட்டாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!