வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (12/07/2018)

கடைசி தொடர்பு:14:25 (12/07/2018)

போதைப் பொருள் கடத்தினால் மரண தண்டனை! சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த சிறிசேனா

இலங்கையில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த 1976-ம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனைச் சட்டத்தை அமல்படுத்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், `போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச் சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது' என அமைச்சரவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

சிறிசேனா - போதைப் பொருள்

இலங்கையில் அண்மைக்காலமாக போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடத்தல் தொடர்பான கொலைகளும் நிகழ்ந்துள்ளன. இந்த குற்றச் செயல்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து, போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தண்டிக்க, மரண தண்டனைச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான ஒப்புதலை அதிபர் மைத்ரிபால சிரிசேனா அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

சிறிசேனா

இலங்கையில் கடைசியாக 1976-ல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்குத் தண்டனை வழங்கினாலும் 1978-ம் ஆண்டுக்குப் பிறகு பொறுப்பில் அமர்ந்த இலங்கை அதிபர்கள் தண்டனை தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்கவில்லை. அதன்பிறகு, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதனால், தூக்குத் தண்டனை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது மரண தண்டனைச் சட்டம்.